சுவரில் அடித்து பாகனை கொன்ற யானை திருப்பரங்குன்றம் கோவில் வளாகத்தில் பரபரப்பு


சுவரில் அடித்து பாகனை கொன்ற யானை  திருப்பரங்குன்றம் கோவில் வளாகத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 25 May 2020 4:27 AM GMT (Updated: 25 May 2020 4:27 AM GMT)

திருப்பரங்குன்றம் கோவில் யானை திடீரென பாகனை சுவரில் அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பரங்குன்றம், 

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலானது அறுபடை வீடுகளில் முதல் படை வீடு ஆகும். தற்போது ஊரடங்கினால் இந்த கோவில் பூட்டப்பட்டுள்ளது.

இந்த கோவிலில் தெய்வானை என்ற பெயரில் பெண் யானை உள்ளது. கடந்த 3½ ஆண்டுகளுக்கு முன்பு அசாம் மாநில வனப்பகுதியில் இருந்து 10 வயதாக இருந்த போது, இந்த யானை வாங்கப்பட்டு திருப்பரங்குன்றம் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது.

இந்த யானை ஆரம்பத்தில் முரண்டு பிடித்ததாகவும், அவ்வப்போது கோபம் அடைந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அதன்பின் பாகன்கள் கொடுத்த பயிற்சியால் அதன் போக்கில் சில மாற்றங்கள் ஏற்பட்டு ஒத்துழைத்தது. பின்னர் விழாக்காலங்களில் சாமி புறப்பாடு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் அப்படியே யானையையும் பார்த்து தரிசித்து செல்வார்கள். இந்த நிலையில் ஊரடங்கினால் கோவில் மூடப்பட்ட நிலையில், யானையின் பராமரிப்பு தொடர்ந்து வந்தது. பாகன்கள் அவ்வப்போது பயிற்சியும் கொடுத்தனர்.

சுவரில் அடித்து கொன்றது

இந்த நிலையில் நேற்று பகலில் யானை வழக்கம் போல் இருந்தது. நேற்று முகூர்த்த நாள் என்பதால் கோவிலின் முன்பு சன்னதி வீதியில் ஏராளமான ஜோடிகளுக்கு திருமணம் நடந்ததால், அந்த வீதியும் பகல் நேரத்தில் கலகலப்பாகவே இருந்தது.

ஆனால், மாலை 6 மணி அளவில் கோவிலுக்குள் உள்ள யானை மண்டபத்தில் தெய்வானை யானையை குளிக்க வைக்கும் முயற்சியில் மதுரை திடீர்நகரைச் சேர்ந்த துணை பாகன் காளி என்ற காளஸ்வரன் (வயது 34) ஈடுபட்டதாக தெரிகிறது.

அப்போது யானை திடீரென்று ஆவேசம் அடைந்தது. இதனை கண்டு பாகன் சுதாரிப்பதற்குள், யானையின் தும்பிக்கை பிடியில் அவர் சிக்கிக்கொண்டார். பிளிறிய யானையிடம் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள அவர் அலறியும் பயன் இல்லாமல் போனது. பாகன் காளஸ்வரனை தூக்கி சுவரில் மாறி மாறி அடித்தது. பின்னர் காலால் எட்டி உதைத்து வீசியதாகவும் தெரியவருகிறது.

இதற்கிடையே இந்த சத்தம் கேட்டு மற்றொரு துணை பாகன் ராஜேஷ் ஓடிவந்து யானையை ஆசுவாசப்படுத்த முயன்றுள்ளார். ஆனால் கோபம் குறையாத அந்த யானை, அவரையும் தாக்க முயன்றதாக தெரிகிறது. ஆனால் அவர் கோவில் சுவரில் ஏறி உயிர்தப்பினார். அங்கு நின்றபடி கூச்சலிட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு உருவானது.

பரிதாபமாக இறந்தார்

சற்று நேரத்தில் கோவில் ஊழியர்கள் மொத்தமாக வந்ததையடுத்து பாகன் ராஜேஷ் சுவரில் இருந்து கீழே இறங்கி யானை மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தார். அதன்பின் யானையின் கோபம் சற்று தணிந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி யானை கட்டப்பட்டது.

அதுவரை பலத்த காயத்துடன் கிடந்த பாகன் காளஸ்வரனை யாரும் நெருங்க முடியவில்லை. யானையின் கோபம் தணிந்ததை உறுதி செய்த பின்னர்தான், காளஸ்வரன் அருகே மற்றவர்கள் சென்று அவரை மீட்டு திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்து போனார். இதனால் பெருத்த சோகம் ஏற்பட்டது.

மயக்க ஊசி செலுத்தினர்

இதற்கிடையே கால்நடை டாக்டர்கள் விரைந்து வந்து யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். அதை தொடர்ந்து யானை தரையில் படுத்துக்கொண்டது. வனத்துறையினரும் விரைந்து பார்வையிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக திருப்பரங்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story