வெளிமாநிலங்களில் இருந்து திரும்பியவர்கள் தனிமையில் இருக்காமல் கிராமங்களில் சுற்றிதிரியும் நிலை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
விருதுநகர் மாவட்டத்திற்கு வெளிமாநிலங்களில் இருந்து வரும் பலர் அதிகாரிகளின் கண்காணிப்பில் இருந்து தப்பி முகாம்களில் தனிமைப்படுத்தப்படாமல் தங்கள் சொந்த கிராமங்களில் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் சுற்றித்திரிவதால் அவர்களை கண்டறிந்து மருத்துவ பரிசோதனை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்,
டெல்லி, மும்பை போன்ற வெளிமாநிலங்களில் இருந்து சிறப்பு ரெயில்கள் மூலம் ஊர் திரும்புபவர்கள் மாவட்ட அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இதில் நோய் தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
தப்பும்நிலை
இந்த நிலையில் மும்பையில் இருந்து தனியார் வேன்கள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களில் ஊர் திரும்புபவர்கள் அதிகாரிகளின் கண்காணிப்பை மீறி தங்கள் சொந்த கிராமங்களுக்கு சென்றடையும் நிலை உள்ளது. இவ்வாறு சொந்த கிராமங்களுக்கு செல்பவர்களை பற்றி அந்த கிராம மக்களும், மாவட்ட நிர்வாகத்துக்கு உரிய தகவல் தெரிவிப்பதில்லை. இதனால் அவர்கள் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் கிராமப்பகுதிகளில் சுற்றிதிரியும் நிலை உள்ளது.
டெல்லி, மும்பையில் இருந்து திரும்புபவர்களில் பெரும்பாலானோருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் கட்டுப்பாடு இல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்து வந்து கிராமங்களில் சுற்றித்திரிபவர்களால் கிராமப்பகுதிகளில் கொரோனா சமூக பரவல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
நேற்று கொரோனா தொற்று பாதிப்பு அடைந்த 5 பேர் முகாம்களில் இல்லாமல் அவர்களது சொந்த கிராமத்தில் இருந்தவர்கள் தான். அவர்களை கண்டறிந்து மருத்துவ பரிசோதனை செய்ததில் நோய் தொற்று உறுதி ஆகி உள்ளது.
கோரிக்கை
எனவே மாவட்ட நிர்வாகம், கிராம பஞ்சாயத்து நிர்வாகங்களின் மூலம் கிராமப்பகுதிகளில் வெளிமாநிலங்களில் இருந்து திரும்பியவர்கள் யாரேனும் உள்ளனரா என்பதை கண்டறிந்து அவர்களை முகாம்களுக்கு அழைத்து வந்து மருத்துவ பரிசோதனை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இல்லையென்றால் கிராமப்பகுதிகளில் நோய் சமூக பரவல் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும்.
Related Tags :
Next Story