வனவிலங்குகளை வேட்டையாட முயற்சி: நாட்டு வெடிகுண்டுகளுடன் வாலிபர்கள் கைது


வனவிலங்குகளை வேட்டையாட முயற்சி:   நாட்டு வெடிகுண்டுகளுடன் வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 25 May 2020 10:44 AM IST (Updated: 25 May 2020 10:44 AM IST)
t-max-icont-min-icon

நாட்டு வெடிகுண்டுகளை வீசி வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக சென்ற 2 வாலிபர்கள் வனத்துறையினரிடம் பிடிபட்டனர்.

ராஜபாளையம், 

சேத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பிராவடியாறு பீட் வனப்பகுதி உள்ளது. இந்த பகுதியில் வனச்சரக அலுவலர் சுப்பிரமணியம் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் மரங்களுக்கு இடையே சந்தேகப்படும்படியாக 2 பேர் மறைந்து இருந்தனர்.

இதையடுத்து அவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களை விசாரித்தபோது, சுந்தரராஜபுரம் கிராமத்தை சேர்ந்த மனோஜ்குமார் (வயது 20), சதீஷ்கர் (21) என்றும், சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த அவர்கள், தற்போது ஊரடங்கின் காரணமாக சொந்த ஊருக்கு வந்துள்ளனர் என்றும் தெரியவந்தது.

வெடிகுண்டுகளுடன் கைது

பல நாட்களாக வீட்டிலேயே பொழுதை கழித்த அவர்கள், வனப்பகுதிக்குள் சென்று விலங்குகளை வேட்டையாட முடிவு செய்தனர். இதற்காக நாட்டுவெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்களுடன் வனப்பகுதிக்குள் வந்துள்ளனர். அங்கு உலாவும் வன விலங்குகளை வேட்டையாட முயன்றபோது வனத்துறையினரிடம் சிக்கியுள்ளனர்.

இதையடுத்து இவர்கள் பதுக்கி வைத்திருந்த 10 நாட்டு வெடிகுண்டுகள், அரிவாள், செல்போன், கத்தி ஆகியவைகளை வனத்துறையினர் கைப்பற்றி அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

Next Story