குடிபோதையில் தண்ணீர் தொட்டி மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்
அங்கேரிபாளையம் அருகே குடிபோதையில் தண்ணீர் தொட்டி மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீட்கப்பட்டார்.
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த அவினாசிகவுண்டம்பாளையம் காமராஜர் வீதியில் 75 அடி உயர மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. நேற்று மதியம் வாலிபர் ஒருவர் அந்த தண்ணீர்தொட்டி மீது ஏறி நின்று கொண்டு, கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டல் விடுத்தார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையம் மற்றும் திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விவேக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த வாலிபரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர் சமரசமடையவில்லை. இதனால் சப்-இன்ஸ்பெக்டர் அந்த வாலிபரிடம் நைசாக பேச்சு கொடுத்தபடியே தொட்டி மீது ஏறி அந்த வாலிபரை அப்படியே பிடித்து காப்பாற்றினார்.
குடிபோதையில்
அந்த வாலிபர் குடிபோதையில் இருந்ததால் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் உதவியுடன் கயிற்றால் கட்டி அவரை பத்திரமாக கீழே இறக்கினார்கள். அந்த வாலிபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் அந்த பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் (வயது 33) என்பது தெரியவந்தது. அவருடைய மனைவி மற்றும் 2 குழந்தைகள் ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியில் இருப்பதும், வாலிபரின் பெற்றோரும் பவானிசாகருக்கு சென்றிருப்பதும் தெரியவந்தது. பிரவீன்குமார் அடிக்கடி குடித்து விட்டு வந்ததால் வீட்டு உரிமையாளரிடம் சாவியை கொடுக்க வேண்டாம் என்று பிரவீன்குமாரின் தந்தை கூறியதாக தெரிகிறது.
பாராட்டு
நேற்று காலை குடிபோதையில் வீட்டிற்கு சென்ற பிரவீன்குமார் வீடு பூட்டி இருந்ததால், ஆத்திரமடைந்து திடீரென தண்ணீர் தொட்டி மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. பின்னர் அவருடைய பெற்றோரிடம் பாதுகாப்பாக போலீசார் ஒப்படைத்தனர். சரியான நேரத்தில் பிரவீன்குமாரை காப்பாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் விவேக்குமாரை பொதுமக்கள் பாராட்டினார்கள்.
Related Tags :
Next Story