கடலூர் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சலூன் கடைகள் திறப்பு


கடலூர் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சலூன் கடைகள் திறப்பு
x
தினத்தந்தி 25 May 2020 11:21 AM IST (Updated: 25 May 2020 11:21 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சலூன் கடைகள் திறக்கப்பட்டது. இதில் முக கவசம் அணிந்தபடி கடைக்காரர்கள் முடி திருத்தம் செய்தனர்.

கடலூர்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. தற்போது 4-ம் கட்ட ஊரடங்கு வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, நோய் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கைக்காக சில பாதுகாப்பு வழிமுறைகளுடன் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.

இதன்படி கடந்த 19-ந்தேதி ஊரக பகுதிகளில் சலூன் கடைகளை திறக்க அரசு உத்தரவிட்டது. ஆனால் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் கடைகளை திறப்பது பற்றி அறிவிப்பு வெளியிடவில்லை. இதனால் அந்த பகுதிகளில் கடை வைத்திருக்கும் சலூன் கடைக்காரர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் நிபந்தனைகளுடன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அதன்படி தற்போது சென்னையை தவிர மற்ற இடங்களில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சலூன் கடைகள், அழகு நிலையங்களை நிபந்தனைகளுடன் திறக்கலாம் என்று அரசு அறிவித்தது. ஆனால் குளிர்சாதன வசதி இருந்தாலும் அதை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து கடலூர் மாவட்டத்தில் 5 நகராட்சி, 16 பேரூராட்சி பகுதிகளில் நேற்று சலூன் கடைகள் திறக்கப்பட்டன. கடந்த 60 நாட்களை கடந்து சலூன் கடைகள் திறக்கப்பட்டதால், ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதேபோல் இது வரை முடி திருத்தம் செய்யாமல் இருந்தவர்கள் நேற்று சலூன் கடைகளில் காலை 7 மணிக்கே வந்து காத்திருந்தனர். சிலர் முன்கூட்டியே கடைக்காரர்களிடம் பேசி, எந்த நேரத்தில் வர வேண்டும் என்று பதிவும் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு சென்று முக சவரம், முடி திருத்தம் செய்தனர். சில கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது.

இருப்பினும் கடைக்காரர்கள், கடை ஊழியர்கள் அனைவரும் முக கவசம் அணிந்தபடி வேலையில் ஈடுபட்டனர். கடைக்கு வந்த வாடிக்கையாளர்களும் முக கவசம் அணிந்தபடி சமூக இடைவெளியுடன் காத்திருந்து முடி வெட்டி சென்றனர். சானிடைசர் மூலம் அவ்வப்போது கைகளையும் சுத்தம் செய்தனர். வாடிக்கையாளர்களுக்காக சில கடைகளில் சானிடைசர் வைக்கப்பட்டு இருந்தது. அழகு நிலையங்களும் திறக்கப்பட்டு இருந்தன. இதில் பெண்கள் ஆர்வத்துடன் சென்று தங்களை அழகுப்படுத்திக்கொண்டனர்.

இது வரை வீடுகளில் உள்ள பழங்கள், கத்தாழை, கடலை மாவு, சந்தனம், எலுமிச்சை, வெள்ளரிக்காய், தக்காளி, முட்டை, தேன் போன்றவற்றை கொண்டு தங்களை அழகுப்படுத்திக்கொண்ட பெண்கள், தற்போது அழகு நிலையங்கள் திறந்ததும் அங்கு மிகுந்த ஆர்வத்துடன் சென்றதை காண முடிந்தது.

Next Story