கர்ப்பிணியின் வயிற்றில் எட்டி உதைத்து கருவை கலைத்த கணவர்


கர்ப்பிணியின் வயிற்றில் எட்டி உதைத்து கருவை கலைத்த கணவர்
x
தினத்தந்தி 25 May 2020 12:01 PM IST (Updated: 25 May 2020 12:01 PM IST)
t-max-icont-min-icon

குழந்தை பிறந்தால் ஆபத்து என ஜோதிடர் கூறியதால் அம்மாபேட்டை அருகே கர்ப்பிணியின் வயிற்றில் எட்டி உதைத்து அவருடைய கணவர் கருவை கலைத்தார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

அம்மாபேட்டை,

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள முளியனூரை சேர்ந்தவர் முனுசாமி(வயது 32). தொப்பபாளையத்தை சேர்ந்த மூர்த்தி மகள் ரம்யா(25). இவருக்கும், முனுசாமிக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்கள் 2 பேரும் கட்டிட தொழிலாளிகள். இவர்களுக்கு சுகதீஸ்வரன் (5) என்ற ஆண் குழந்தை உள்ளது.

முனுசாமிக்கும், ரம்யாவுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ரம்யா கணவருடன் கோபித்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று தங்கியிருந்தார். இதைத்தொடர்ந்து பெற்றோர் அவரை சமாதானம் செய்து கணவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மீண்டும் கணவருடன் வசித்து வந்தார்.

இந்தநிலையில் ரம்யா மீண்டும் கர்ப்பமானார். இதைத்தொடர்ந்து முனுசாமி ஜோதிடம் பார்க்க சென்றுள்ளார். அப்போது, ரம்யாவுக்கு 2-வதாக குழந்தை பிறந்தால் முனுசாமியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஜோதிடர் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த முனுசாமி, தனது மனைவியிடம் அவரது வயிற்றில் வளரும் கருவை கலைக்குமாறு கூறி வந்துள்ளார். அதற்கு ரம்யா மறுத்துள்ளார்.

இதனால் கணவருக்கும், மனைவிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த முனுசாமி சம்பவத்தன்று மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம், கருவை கலைக்குமாறு கூறி அடித்து உதைத்துள்ளார். பின்னர் அவருடைய கழுத்தில் இருந்த தாலி கயிற்றை கையால் இழுத்துக்கொண்டு, காலால் கர்ப்பிணியான மனைவியை ஈவு, இரக்கம் இல்லாமல் எட்டி உதைத்துள்ளார். இதனால் ரம்யா வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார்.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று ரம்யாவை மீட்டு அவரது தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே சம்பவம் நடந்ததும் முனுசாமி அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். தாய் வீட்டில் தங்கியிருந்த ரம்யாவுக்கு கடந்த 22-ந் தேதி திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது.

உடனே அவரை சிகிச்சைக்காக குருவரெட்டியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு ரம்யாவை பரிசோதித்த டாக்டர்கள், அவரது வயிற்றில் வளர்ந்த கரு முனுசாமி எட்டி உதைத்ததால் ஏற்கனவே கலைந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்த ரம்யா அம்மாபேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முனுசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story