அந்தியூர் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை; வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன


அந்தியூர் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை; வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன
x
தினத்தந்தி 25 May 2020 6:38 AM GMT (Updated: 25 May 2020 6:38 AM GMT)

அந்தியூர் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன.

ஈரோடு,

அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் மக்கள் வெளியில் நடமாட முடியாமல் அவதிப்பட்டு வந்தார்கள். இரவில் புழுக்கம் அதிகமாக இருந்ததால் வீட்டினுள் தூங்க முடியாமலும் சிரமப்பட்டு வந்தனர். எனவே கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்க மழை பெய்யாதா? என பொதுமக்கள் ஏங்கி தவித்தனர்.

இந்த நிலையில் அந்தியூர் பகுதியில் நேற்று இரவு 7.30 மணிக்கு சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை 8.30 மணி வரை நீடித்தது. இதன்காரணமாக பருவாச்சி பகுதியில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. மேலும் ஒரு வீட்டின் சிமெண்டாலான மேற்கூரை தூக்கி வீசப்பட்டது. அதில் சிமெண்டாலான மேற்கூரை சுக்கு நூறாக உடைந்து சேதம் அடைந்தது. நல்லவேளையாக வீட்டில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் பருவாச் சியில் உள்ள பால் கூட்டுறவு சங்கத்தில் அமைக்கப் பட்டிருந்த பந்தலின் மேற் கூரையும், பல மாட்டுக்கொட்டகைகளின் மேற்கூரைகளும் விழுந்து சேதம் அடைந்தன. அதுமட்டுமின்றி 15-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் முறிந்து மின் கம்பத்தின் மீது விழுந்தன. இதில் பல மின் கம்பங்கள் சாய்ந்ததுடன், பருவாச்சி பகுதியில் மின் தடை ஏற்பட்டது.

இதேபோல் பெருந்துறை பகுதியில் நல்ல வெயில் அடித்தது. இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது.

இந்த மழை 15 நிமிட நேரம் நீடித்தது. பின்னர் மழை தூறியது. இதன்காரணமாக இரவில் குளிர்ந்த காற்று வீசியது.

Next Story