ஊரடங்கால் உணவகங்களில் பார்சல் வழங்க மட்டுமே அனுமதி: ஒரு லட்சம் ஓட்டல் தொழிலாளர்கள் வேலை இழப்பு


ஊரடங்கால் உணவகங்களில் பார்சல் வழங்க மட்டுமே அனுமதி: ஒரு லட்சம் ஓட்டல் தொழிலாளர்கள் வேலை இழப்பு
x
தினத்தந்தி 26 May 2020 5:00 AM IST (Updated: 25 May 2020 11:34 PM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கால் உணவகங்களில் பார்சல் வழங்க மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உள்ளே அமர்ந்து சாப்பிட அனுமதி வழஙகப்படாததால் உணவு பரிமாறும் சப்ளையர்கள் உள்பட வேலூர் மாவட்டத்தில் ஒரு லட்சம் ஓட்டல் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அவர்கள் வாழ்வாதாரத்துக்காக வேறு வேலையை தேடிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

வேலூர்,

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். பெரும்பாலான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்து வருமானம் இன்றி வறுமையில் வாடி வருகிறார்கள். அவர்களுக்கு அரசும், தன்னார்வலர்களும் நிவாரண பொருட்களை வழங்கி உதவி வருகின்றனர்.

ஊரடங்கால் பல்வேறு தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள், திரையரங்குகள், பூங்காக்கள், சுற்றுலா தலங்கள் போன்றவை மூடப்பட்டு உள்ளன. ரெயில், பஸ், கார் போன்ற வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் என்பதால் பொதுமக்கள் அதிகம் வருகை தரும் ஓட்டல்கள், டீக்கடைகள், பேக்கரி, இனிப்பகங்கள், ஜூஸ், குளிர்பான கடைகள், ஐஸ்கிரீம் பார்கள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.

அதன்காரணமாக ஓட்டல் தொழில் முற்றிலும் முடங்கியது. குறிப்பாக சிறிய, பெரிய ஓட்டல்களில் பணிபுரிந்த சமையல் தொழிலாளர்கள், உணவு பரிமாறும் நபர்கள் (சப்ளையர்கள்), ஓட்டல் மேற்பார்வையாளர்கள் உள்பட பலர் வேலை இழந்தனர். அதேபோன்று ஒட்டல் தொழில் மூலம் மறைமுகமாக பயன்பெறும் பலரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது. கல்வி, வேலை உள்ளிட்டவற்றுக்காக குடும்பத்தை பிரித்து தனியாக வசித்து வந்தவர்கள் ஓட்டல்கள் மூடப்பட்டதால் சாப்பாட்டிற்கு பெரிதும் அவதி அடைந்தனர். சிலர் சமூக வலைதளங்களில் உள்ள சமையல் குறிப்புகளை பார்த்து சமைத்து சாப்பிட்டனர். வாடகை வீட்டில் தங்கியிருந்தவர்கள் அருகேயுள்ள வீடுகளில் உணவிற்கு ஏற்பாடு செய்து கொண்டனர்.

ஊரடங்கு தளர்வு காரணமாக ஓட்டல்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டன. ஓட்டல்களில் குறிப்பிட்ட நேரத்தில் பார்சல் மட்டுமே வழங்க வேண்டும். அங்கிருந்து பொதுமக்கள் சாப்பிட அனுமதி கிடையாது என்று தமிழக அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து ஓட்டல்கள் திறக்கப்பட்டு உணவு வகைகள் பார்சல் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட உணவு வகைகள் மட்டுமே ஓட்டல்களில் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதனால் 15 சதவீத ஊழியர்களே பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஓட்டல்கள் திறந்தும் மீதமுள்ள 85 சதவீதம் பேருக்கும் வேலை இல்லை. அதனால் அவர்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஓட்டலில் பணிபுரிந்த சப்ளையர்களுக்கு 2 மாதங்களாக வேலையில்லாதால் அவர்கள் வாழ்வாதாரத்துக்காக வேறு வேலையை தேடி செல்கின்றனர்.

இதுகுறித்து வேலூர் மாவட்ட ஓட்டல்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், வேலூர் மாவட்டத்தில் ஆயிரத்க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய ஓட்டல்கள் காணப்படுகின்றன. இங்கு 50 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். ஓட்டல் தொழில் மூலமாக சுமார் 1½ லட்சம் பேர் மறைமுகமாக வேலை பெற்றனர். தற்போது உணவகங்களில் பார்சல் மட்டுமே வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் 25 சதவீத கடைகளில் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. அந்த கடைகளில் 10 முதல் 15 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகிறார்கள்.

வழக்கமாக ஓட்டல்களில் நடைபெறும் வியாபாரத்தில் 15 சதவீத வியாபாரமே தற்போது நடக்கிறது. இந்த வருமானம் ஓட்டல் கட்டிடத்தின் வாடகை, தொழிலாளர்களுக்கு சம்பளம் போன்றவற்றுக்குதான் சரியாக இருக்கும். ஊரடங்கால் சுமார் ஒரு லட்சம் ஓட்டல் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பு முடிந்து ஓட்டல்கள் பழையபடி இயங்குவதன் மூலமே 2 லட்சம் பேரின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும் என்று தெரிவித்தனர்.

Next Story