தூத்துக்குடி-சென்னை இடையே விமான சேவை திடீர் ரத்து - பயணிகள் ஏமாற்றம்


தூத்துக்குடி-சென்னை இடையே விமான சேவை திடீர் ரத்து - பயணிகள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 26 May 2020 4:30 AM IST (Updated: 25 May 2020 11:52 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி-சென்னை இடையேயான விமான சேவை நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தினமும் 2 விமான நிறுவனங்கள் மூலம் 5 விமான சேவைகள் நடைபெற்று வந்தது. அதேபோன்று பெங்களூருவுக்கும் ஒரு விமானம் இயக்கப்பட்டு வந்தது. இதனால் தூத்துக்குடி விமான நிலையம் பரபரப்பாக இயங்கி வந்தது.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து விமான சேவை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து 2 மாதங்களாக விமானங்கள் இயக்கப்படவில்லை.

தூத்துக்குடி-சென்னை விமானம்

இந்த நிலையில் நேற்று முதல் உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை-தூத்துக்குடி-சென்னை இடையேயான விமானத்தை இயக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான முன்பதிவுகளும் தொடங்கியது.

அதன்படி, சென்னையில் இருந்து விமானம் காலை 11-15 மணிக்கு புறப்பட்டு மதியம் 12-35 மணிக்கு தூத்துக்குடிக்கு வருவதாக இருந்தது. அதன்பிறகு தூத்துக்குடியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை செல்வதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தன.

திடீர் ரத்து

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வருவதற்கு 38 பேரும், தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு செல்ல 56 பேரும் டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தனர். இந்த நிலையில் நேற்று காலையில் திடீரென விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிகம் இருப்பதால், விமான சேவை ரத்து செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மீண்டும் தூத்துக்குடி-சென்னை இடையே எப்போது விமான சேவை தொடங்கப்படும் என்று பயணிகள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.

Next Story