எட்டயபுரம் அருகே, ஆசிரியரை காரை ஏற்றி கொல்ல முயற்சி - 2 பேர் கைது
எட்டயபுரம் அருகே ஆசிரியரை காரை ஏற்றி கொல்ல முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
எட்டயபுரம்,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பெரிய புளியம்பட்டியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 40). இவர் பந்தல்குடி அருகே சின்னதுமாக்குன்றில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே சோழபுரத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் ஆனந்தகிருஷ்ணன் (24). விளாத்திகுளம் அருகே குளத்தூரை அடுத்த தெற்கு பனையூரைச் சேர்ந்தவர் நாராயணன் மகன் சரவணகுமார் (30). நண்பர்களான இவர்கள் 2 பேரும் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தனர்.
இவர்கள் 2 பேரும் சேர்ந்து கோவிந்தராஜிடம் பழைய கார்களை வாங்கி, தனியார் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடுவதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறினர்.
ரூ.25 லட்சம் மோசடி
இதனை உண்மை என்று நம்பிய கோவிந்தராஜ் தன்னிடம் இருந்த ரூ.25 லட்சத்தை ஆனந்த கிருஷ்ணனிடம் வழங்கினார். பணத்தை பெற்று கொண்ட ஆனந்த கிருஷ்ணன், பழைய கார்களை வாங்கி, வாடகைக்கு விட்டுள்ளதாக கூறி, ஒரு மாதம் மட்டும் கோவிந்தராஜிக்கு பணம் வழங்கினார். பின்னர் ஆனந்தகிருஷ்ணன், கோவிந்தராஜிக்கு வாடகை பணம் வழங்கவில்லை.
இதனால் கோவிந்தராஜ் தனது பணத்தை திருப்பி தருமாறு ஆனந்தகிருஷ்ணனிடம் கூறினார். இதையடுத்து நேற்று முன்தினம் ஆனந்தகிருஷ்ணன் ரூ.25 லட்சத்தை திருப்பி தருவதாகவும், அதனை பெற்று கொள்வதற்கு எட்டயபுரம் அருகே சிந்தலைக்கரை ரோட்டில் உள்ள தனியார் நிறுவனம் முன்பு வருமாறு கோவிந்தராஜிடம் கூறினார்.
காரை மோத விட்டு...
இதையடுத்து பணத்தை திரும்ப பெறுவதற்காக எட்டயபுரம் அருகே கோவிந்தராஜ் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காரில் வந்த ஆனந்தகிருஷ்ணன், கோவிந்தராஜின் மோட்டார் சைக்கிளின் மீது காரை மோதவிட்டார். இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த கோவிந்தராஜ் உயிருக்கு போராடியவாறு கிடந்தார்.
உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, கோவிந்தராஜை மீட்டு சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
2 பேர் கைது
இதுகுறித்த புகாரின்பேரில், எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தகிருஷ்ணன், சரவணகுமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் ஆனந்தகிருஷ்ணனின் காரையும் பறிமுதல் செய்தனர்.
எட்டயபுரம் அருகே ஆசிரியரை காரை ஏற்றி கொல்ல முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story