193 ரெயில்கள் மூலம் 2 லட்சத்து 41 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் பயணம் - தெற்கு ரெயில்வே தகவல்
193 ரெயில்கள் மூலம் 2 லட்சத்து 41 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் இருந்து வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு ரெயில் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட ரெயில் நிலையங்களில் இருந்து இதுவரை 193 ஷர்மிக் ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில்கள் மூலம் இதுவரை 2 லட்சத்து 41 ஆயிரத்து 850 வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தெற்கு ரெயில்வேயில் பல நாள் முடியாமல் இருந்த சில பராமரிப்பு பணிகளையும் இந்த ஊரடங்கு மூலம் செய்து முடிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை யானைகவுனி பகுதியில் பல நாட்களாக மூடப்பட்டிருந்த ரெயில்வே பாலம் தற்போது அகற்றப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் புதிய மேம்படுத்தப்பட்ட பாலம் அமைக்கும் பணி கூடிய விரைவில் தொடங்கப்படும். ஈரோடு அனங்கூர்-காவேரி ரெயில் நிலையங்கள் இடையே உள்ள 100 ஆண்டு பழமையான பாலமும் சீரமைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜோலார்ப்பேட்டை பணிமனையில் பல்வேறு வகையான தண்டவாளம் சீரமைப்பு பணிகளும் செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரெயில்வே சார்பில் முகக்கவசங்கள், தனிநபர் பாதுகாப்பு உடைகள், கிருமி நாசினிகள் உள்ளிட்டவைகள் தயாரிக்கப்பட்டு ரெயில்வே ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் தமிழக ரெயில்வே போலீசார் உதவியுடன் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story