8 பள்ளிகளில் நாளை தொடக்கம்: பிளஸ்-2 விடைத்தாள்கள் திருத்தும் பணியில் 1,191 ஆசிரியர்கள் - வேலூர் கலெக்டர் தகவல்
வேலூர் மாவட்டத்தில் 8 பள்ளிகளில் பிளஸ்-2 விடைத்தாள்கள் திருத்தும் பணியில் 1,191 ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.
வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி நாளை (புதன்கிழமை) தொடங்க உள்ளது. இதுதொடர்பாக வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், சுகாதாரத்துறை துணை இயக்குனர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்துக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி பேசியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் 8 பள்ளிகளில் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற உள்ளது. வேலூரை தவிர்த்து முதன்முறையாக குடியாத்தத்திலும் விடைத்தாள்கள் திருத்தும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. 1,191 ஆசிரியர்கள் ஒரு லட்சத்து 3 ஆயிரம் விடைத்தாள்களை திருத்த உள்ளனர். இந்த பணிகள் முடிவடைந்த பின்னர் பிளஸ்-1 விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தொடங்கும். இந்த பள்ளிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
விடைத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களில் 130 பேர் பிற மாவட்டங்களில் வசிக்கிறார்கள். அவர்கள் வேலூர் மாவட்டத்துக்கு வந்து செல்லும்போது சோதனை சாவடியில் காண்பிக்க புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும். ஆசிரியர்கள் அவற்றை முதன்மை கல்வி அலுவலர்களிடம் பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு ஆசிரியரும் தினமும் 25 விடைத்தாள்கள் திருத்த வேண்டும். ஒரு அறையில் 8 ஆசிரியர்கள் மட்டுமே தனிநபர் இடைவெளி விட்டு முககவசம் அணிந்து விடைத்தாள்கள் திருத்த வேண்டும்.
விடைத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்காக 8 வழித்தடங்களில் 17 அரசு பஸ்கள் மாவட்டம் முழுவதும் இயக்கப்படும். ஆசிரியர்கள் பஸ்சில் பயணம் செய்யும்போது அடையாள அட்டையை நடத்துனரிடம் காண்பிக்க வேண்டும். மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள், குழந்தைகளுடன் வருபவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோர் உடன் ஒருவரை அழைத்து வரலாம். ஆசிரியர்கள் உடன் வருபவர்கள் பள்ளி வளாகத்தில் தனிஅறையில் தனிநபர் இடைவெளி விட்டு அமர வைக்கப்படுவார்கள்.
கொரோனாவினால் தடை செய்யப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து வரும் ஆசிரியர்கள் அடையாள அட்டையை காண்பித்துவிட்டு பணிக்கு வரலாம். அவர்களை அனுமதிக்கும்படி காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அரசு பஸ்சை பயன்படுத்தாமல் சொந்த வாகனங்களில் விடைத்தாள் திருத்தும் மையத்துக்கு வரும் ஆசிரியர்கள் வாகன அனுமதி சீட்டை முதன்மை கல்வி அலுவலரிடம் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து கலெக்டர், விடைத்தாள் திருத்தும் 8 பள்ளிகள், கழிவறைகள், உணவு அருந்தும் இடம் உள்ளிட்டவை கிருமிநாசினியால் சுத்தம் செய்யப்பட வேண்டும், ஒவ்வொரு பள்ளியின் நுழைவுவாயிலிலும் கைகழுவும் தொட்டியும், கைகழுவும் திரவமும் வைக்க வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன், வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலவன், போக்குவரத்துக்கழக அதிகாரிகள், தாசில்தார்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story