6 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடங்குகிறது


6 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி   நாளை தொடங்குகிறது
x
தினத்தந்தி 26 May 2020 3:10 AM IST (Updated: 26 May 2020 3:10 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் 6 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை (புதன்கிழமை) முதல் தொடங்குகிறது.

திண்டுக்கல், 

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெற்றது. அதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி தொடங்க இருந்த நேரத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் விடைத்தாள் திருத்தும் பணி தள்ளிவைக்கப்பட்டது. இதற்கிடையே ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

இதைத்தொடர்ந்து பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி மாநிலம் முழுவதும் நாளை (புதன்கிழமை) முதல் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்க இருக்கிறது. இதற்காக மாவட்டம் வாரியாக விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

6 மையங்கள்

அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிக்காக 6 மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இதில் திண்டுக்கல்லில் 3 பள்ளிகளிலும், ஒட்டன்சத்திரத்தில் 3 பள்ளிகளிலும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 6 மையங்களிலும் நாளை முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்க இருக்கிறது.

இந்த பணியில் சுமார் 500 ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். அதேநேரம் விடைத்தாள் திருத்தும் மையத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இதில் மையங்கள் முழுவதும் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்படுகிறது. மேலும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் முக கவசம் அணிந்து பணியாற்ற உள்ளனர்.

Next Story