திண்டுக்கல் அருகே கிணற்றில் மூழ்கி 2 தொழிலாளர்கள் பலி துக்க நிகழ்ச்சிக்கு சென்ற போது பரிதாபம்


திண்டுக்கல் அருகே  கிணற்றில் மூழ்கி 2 தொழிலாளர்கள் பலி  துக்க நிகழ்ச்சிக்கு சென்ற போது பரிதாபம்
x
தினத்தந்தி 26 May 2020 3:35 AM IST (Updated: 26 May 2020 3:35 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு கிணற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி 2 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர்.

தாடிக்கொம்பு, 

திண்டுக்கல் மாவட்டம் ராஜக்காபட்டியை அடுத்த சந்தனகுடிலை சேர்ந்தவர் பாலுச்சாமி (வயது 38). அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர் சக்திவேல் (38). இருவரும் பழனி ரோட்டில் செயல்பட்டு வரும் மர அறுவை மில்களில் கூலித்தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் நேற்று அதே பகுதியில் நடந்த துக்க நிகழ்ச்சியில் அவர் கள் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் இறந்தவரின் உடலை அடக்கம் செய்துவிட்டு, வீட்டிற்கு செல்லும் வழியில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றனர். பாலுச்சாமி கிணற்றில் இறங்கி குளித்தார். சக்திவேலுக்கு நீச்சல் தெரியாததால், கிணற்றின் படிக்கட்டில் நின்று குளித்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் சக்திவேல் தவறி விழுந்தார். நீரில் மூழ்கிய அவரை காப்பாற்ற பாலுச்சாமி முயன்றதாக தெரிகிறது.

நீரில் மூழ்கி 2 பேர் பலி

அதில் அவருடன் சேர்ந்து, பாலுச்சாமியும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் மூழ்கி பலியான பாலுச்சாமி, சக்திவேல் ஆகியோரின் உடல்களை மீட்டனர். தகவலறிந்த தாடிக்கொம்பு போலீசார் அங்கு வந்து இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இறந்த பாலுச்சாமிக்கு சுமதி என்ற மனைவியும், ரஞ்சித்குமார், விஜயகுமார் என்ற 2 மகன்களும், புவனேஸ்வரி என்ற ஒரு மகளும் உள்ளனர். இறந்த சக்திவேலுக்கு கனிமொழி என்ற மனைவியும், பெரியநாயகி என்ற மகளும், கார்த்திகேயன் என்ற மகனும் உள்ளனர். துக்க வீட்டுக்கு சென்றவர்கள் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் அவர்களது உறவினர்களிடையே மேலும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story