கர்நாடகத்தில் ஊரடங்கு: ரம்ஜானையொட்டி இஸ்லாமியர்கள் வீடுகளில் தொழுகை நடத்தினர்


கர்நாடகத்தில் ஊரடங்கு: ரம்ஜானையொட்டி இஸ்லாமியர்கள் வீடுகளில் தொழுகை நடத்தினர்
x
தினத்தந்தி 26 May 2020 4:11 AM IST (Updated: 26 May 2020 4:11 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் ஊரடங்கிற்கு மத்தியில் ரம்ஜான் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் வீடுகளில் தொழுகை நடத்தினர்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் நேற்று இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினர். வழக்கமாக புனித ரம்ஜான் பண்டிகை காலத்தில் இஸ்லாமியர்கள், ஈத்கா மைதானத்தில் ஒன்றுகூடி தொழுகையில் ஈடுபட்டு, கட்டி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். ஆனால் இந்த முறை கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், ஒரே இடத்தில் அதிகம் பேர் கூடி தொழுகை நடத்த அனுமதி இல்லை என்று அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து கர்நாடகத்தில் நேற்று இஸ்லாமிய மக்கள், ரம்ஜான் பண்டிகையை எளிமையான முறையில் கொண்டாடினர். அவர்கள் தங்களின் வீடுகளில் குடும்பத்தினருடன் தொழுகை நடத்தினர். பெங்களூரு உள்பட கர்நாடகம் முழுவதும் இஸ்லாமியர்கள் இதே முறையை பின்பற்றி தொழுகை நடத்தினர்.

பெங்களூரு ஜாமா மஸ்ஜித் இமாம் மவுலானா மசூத் இம்ரான் கூறியதாவது:-

“ரம்ஜான் தினத்தன்று இஸ்லாமிய மக்கள் வீடுகளில் தொழுகை நடத்த வேண்டும். வெளியிடங்களில் ஒன்று சேர்ந்து தொழுகையில் ஈடுபடக்கூடாது. மேலும் சுடுகாட்டுக்கு செல்வதையும் தவிர்க்க வேண்டும். வீடுகளில் இருந்தபடியே உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும்.

நாட்டில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொடர்பான வழிநாட்டுதலை நாங்கள் பின்பற்றாவிட்டால், அது எங்களை மட்டும் பாதிக்காது, டாக்டர்கள் மற்றும் அரசையும் பாதிப்படைய செய்யும். விதிமுறைகளை பின்பற்றினால், அதுவே மிகப்பெரிய கொண்டாட்டம்“.

இவ்வாறு அவர் கூறினார்.

பெங்களூரு மட்டுமின்றி, உடுப்பி, கார்வார், மங்களூரு, மைசூரு, பெலகாவி, தார்வார், குடகு ஆகிய பகுதிகள் உள்பட மாநிலம் முழுவதும் நேற்று ரம்ஜான் பண்டிகையையொட்டி வீடுகளிலேயே இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினர். அப்போது அவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்தப்படி தொழுகையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story