சென்னையில் இருந்து வந்த லாரி டிரைவருக்கு கொரோனா தஞ்சை மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 84 ஆக உயர்வு
சென்னையில் இருந்து தஞ்சைக்கு வந்த லாரி டிரைவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது.
தஞ்சாவூர்,
சென்னையில் இருந்து தஞ்சைக்கு வந்த லாரி டிரைவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது.
லாரி டிரைவர்
தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே 83 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இவர்களில் 67 பேர் குணம் அடைந்து வெவ்வேறு நாட்களில் வீடு திரும்பினர். இந்த நிலையில், 30 வயதான வாலிபருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள விளாங்குடி கிராமத்தை சேர்ந்த இவர், சென்னை குரோம்பேட்டையில் குடிநீர் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர், தனது நண்பர் லாரி மூலம் கும்பகோணத்துக்கு கடந்த 22-ந் தேதி வந்தார். பின்னர், தனது சகோதரருடன் மோட்டார் சைக்கிளில் விளாங்குடிக்கு வந்தடைந்தார்.
84 ஆக உயர்வு
அங்குள்ள சோதனைச்சாவடியில் இவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் இவருக்கு தொற்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து விளாங்குடி பகுதி சீல் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்தது. தற்போது 17 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story