வட மாநிலங்களுக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரெயில்கள் மூலம் ரூ.4 கோடி வருமானம் ரெயில்வே அதிகாரி தகவல்


வட மாநிலங்களுக்கு இயக்கப்பட்ட   சிறப்பு ரெயில்கள் மூலம் ரூ.4 கோடி வருமானம்  ரெயில்வே அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 25 May 2020 10:58 PM GMT (Updated: 25 May 2020 10:58 PM GMT)

கோவையில் இருந்து வடமாநிலங்களுக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரெயில்கள் மூலம் ரூ.4 கோடி வருமானம் கிடைத்து உள்ளதாக ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கோவை, 

தொழில் நகரமான கோவையில் வட மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். இவர்கள் இங்குள்ள சிறு,குறு தொழில் நிறுவனங்கள், பெரிய தொழிற்சாலைகள், வணிக வளாகங்களில் பணிபுரிந்தனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் எல்லாம் மூடப்பட்டன. இதனால் வேலையிழந்த வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பு வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்காக நாடு முழுவதும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கோவையில் இருந்து பீகார், சத்தீஸ்கர், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு உள்ளன. இந்த சிறப்பு ரெயில்கள் மூலம் கோவை ரெயில் நிலையத்துக்கு ரூ.4 கோடி வருமானம் கிடைத்து உள்ளது.

இதுகுறித்து ரெயில்வே அதிகாரி கூறியதாவது:-

29 சிறப்பு ரெயில்கள்

கோவையில் இருந்து வட மாநிலங்களுக்கு சிறப்பு ரெயில்கள் கடந்த 8-ந் தேதி முதல் இயக்கப்படுகின்றன. இன்று (அதாவது நேற்று) மாலை உத்தரபிரதேச மாநிலம் அக்பர்பூருக்கு 1,600 பயணிகளுடன் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. இதையடுத்து ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. இதில் கோவையில் இருந்து 800 பேரும், திருப்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து 800 பேரும் பயணம் செய்தனர்.

வட மாநிலங்களுக்கு இதுவரை 29 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு உள்ளது. இந்த சிறப்பு ரெயில்கள் மூலம் கோவை ரெயில் நிலையத்துக்கு ரூ.4 கோடி வரை வருமானம் கிடைத்து உள்ளது. மேலும், 37 ஆயிரத்து 800 பேர் சொந்த மாநிலங்களுக்கு சென்று உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story