பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் வாகனங்களை நிறுத்தியவர்கள் ஊரடங்கு காலத்திற்கு கட்டணம் செலுத்த தேவை இல்லை - ரெயில்வே அதிகாரி தகவல்


பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் வாகனங்களை நிறுத்தியவர்கள் ஊரடங்கு காலத்திற்கு கட்டணம் செலுத்த தேவை இல்லை - ரெயில்வே அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 26 May 2020 4:28 AM IST (Updated: 26 May 2020 4:28 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் வாகனங்களை நிறுத்தியவர்கள், ஊரடங்கு காலத்திற்கு கட்டணம் செலுத்த தேவை இல்லை என்று ரெயில்வே அதிகாரி கூறியுள்ளார்.

பெங்களூரு, 


பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில், இரு சக்கர வாகன நிறுத்தும் இடம் உள்ளது. அங்கு ஒரு வாகனத்திற்கு முதல் 2 மணி நேரத்திற்கு கட்டணமாக ரூ.15 வசூலிக்கப்படுகிறது. அடுத்த ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் 10 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அல்லது ஒரு நாளைக்கு ஒரு வாகனத்திற்கு கட்டணம் ரூ.125 ஆக செலுத்த வேண்டும். தினசரி அங்கு வந்து ரெயில்களில் வேலைக்கு சென்றுவிட்டு வருபவர் களுக்கு மாதாந்திர கட்டணமாக ரூ.1,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்ட பிறகு, அங்கு வாகனம் நிறுத்திவிட்டு சொந்த ஊருக்கு சென்றவர்கள், மீண்டும் திரும்ப முடியவில்லை. கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக இரு சக்கர வாகனங்கள் அங்கு நிற்கின்றன. இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர், 2 மாதங்களுக்கு பிறகு தனது மோட்டார் சைக்கிளை எடுக்க சிட்டி ரெயில் நிலைய பார்க்கிங் பகுதிக்கு வந்தார்.

அவரிடம் ஊரடங்கு காலத்திற்கு ஒரு நாளைக்கு ரூ.125 வீதம் கணக்கிட்டு சுமார் ரூ.8 ஆயிரம் வழங்கினால் தான் மோட்டார் சைக்கிளை எடுக்க அனுமதிக்க முடியும் என்று அங்கு இருந்து பொறுப்பாளர் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றார். இது குறித்து ரெயில்வே துறையின் வணிக பிரிவின் உயர் அதிகாரி சவுரவ் ஜெயின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அதற்கு அவர், “ஊரடங்கு காலத்திற்கு வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்க அனுமதி கிடையாது. இது குறித்து அந்த ஒப்பந்ததாரருக்கு உத்தரவு பிறப்பிக்கப் படும். ஊரடங்கு காலத்திற்கு வாகன ஓட்டிகள் கட்டணம் செலுத்த தேவை இல்லை. ஒருவேளை கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலித்தால், அந்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். அதைத்தொடர்ந்து அந்த நபர் ஊரடங்கு காலத்திற்கு முன்பு வாகனம் நின்ற நாட்களுக்கு மட்டும் கட்டணத்தை செலுத்திவிட்டு தனது மோட்டார் சைக்கிளை நேற்று எடுத்து சென்றார்.

Next Story