பெங்களூரு பி.எம்.டி.சி. பஸ்களில் டிக்கெட் வழங்க முடிவு - கிலோ மீட்டர் அளவில் கட்டணம் நிர்ணயம்


பெங்களூரு பி.எம்.டி.சி. பஸ்களில் டிக்கெட் வழங்க முடிவு - கிலோ மீட்டர் அளவில் கட்டணம் நிர்ணயம்
x
தினத்தந்தி 26 May 2020 4:42 AM IST (Updated: 26 May 2020 4:42 AM IST)
t-max-icont-min-icon

பாஸ் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் பெங்களூரு பி.எம்.டி.சி. பஸ்களில் டிக்கெட் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதாவது கிலோ மீட்டர் அளவில் பயணிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனாவை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே பஸ் உள்பட அனைத்து வகையான போக்குவரத்திற்கும் மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி கர்நாடகத்தில் கடந்த 19-ந் தேதி முதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

பெங்களூருவில் சுமார் 2,000 பி.எம்.டி.சி. பஸ்கள் இயக்கப்படுகின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தினசரி மற்றும் வாராந்திர பாஸ் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதனால் சிறிது தூரம் பயணிப்பவர்களும் ரூ.70 கொடுத்து தினசரி பாஸ் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் ஏழை, எளிய மக்கள், கூலித்தொழிலாளர்கள் உள்பட சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

பயணிக்க முடியும்

பாஸ் வழங்குவதுடன் பாஸ் இல்லாதவர்களுக்கு டிக்கெட் பெற்று பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் பெங்களூருவில் மாநகர பஸ்களில் டிக்கெட் வழங்க முடிவு செய்துள்ளதாக துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி அறிவித்துள்ளார். இதன் மூலம் பாஸ் இல்லாதவர்களும் பஸ்களில் டிக்கெட் பெற்று பயணிக்க முடியும் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால் பஸ்களில் பயணம் செய்யும் சாமானிய மக்கள் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கிலோ மீட்டர் அளவில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து பி.எம்.டி.சி. நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பெங்களூரு பி.எம்.டி.சி. பஸ்களில் தற்போது உள்ள 16 அடுக்கு (ஸ்லாப்) கட்டணத்தை மாற்றிவிட்டு 6 அடுக்காக குறைத்துள்ளோம். சில்லரை பிரச்சினையை தவிர்க்க ஆரம்ப கட்டணத்தை 5 ரூபாயாக நிர்ணயித்துள்ளோம். புதிய முறைப்படி 2 கிலோ மீட்டர் வரை 5 ரூபாய், 3-ல் இருந்து 4 கிலோ மீட்டர் வரை 10 ரூபாய், 5-ல் இருந்து 6 கிலோ மீட்டர் வரை 15 ரூபாய், 7-ல் இருந்து 14 கிலோ மீட்டர் வரை 20 ரூபாய், 15-ல் இருந்து 40 கிலோ மீட்டர் வரை 25 ரூபாய், 41 கிலோ மீட்டருக்கு மேல் 30 ரூபாய் என்ற அளவில் பஸ் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டண மாற்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமலுக்கு வருவதாக பி.எம்.டி.சி. நிர்வாகம் அறிவித்துள்ளது. டிக்கெட் பெற்று பயணம் செய்ய பயணிகள் சரியான சில்லரை கொடுக்க வேண்டும்.

டிஜிட்டல் டிக்கெட்

பஸ்சில் 30 பயணிகள் வரை அல்லது அனைத்து இருக்கையிலும் அமர அனுமதிக்கப்படுவார்கள். பஸ்களில் நின்று பயணம் செய்ய அனுமதி இல்லை. தினசரி, வாராந்திர, மாதாந்திர பாஸ்கள் ஏற்கனவே உள்ள கட்டணப்படி வினியோகம் செய்யப்படும். பெங்களூருவில் தற்போது 750 பஸ்களில் டிஜிட்டல் டிக்கெட் வசதி செய்யப்பட்டுள்ளது. அடுத்து வரும் நாட்களில் அனைத்து பஸ்களிலும் இந்த வசதி ஏற்படுத்தப்படும். இன்று முதல் பஸ்களின் எண்ணிக்கை 3,500 ஆக அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு பி.எம்.டி.சி. நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story