பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட சிங்காநல்லூர் குளத்தை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை


பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட  சிங்காநல்லூர் குளத்தை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை
x
தினத்தந்தி 26 May 2020 4:44 AM IST (Updated: 26 May 2020 4:44 AM IST)
t-max-icont-min-icon

பல்லுயிர் பாதுகாப்ப மண்டலமாக அறிவிக்கப்பட்ட சிங்காநல்லூர் குளத்தை தற்போது ஆகாய தாமரைகள் ஆக்கிரமித்து உள்ளது.

கோவை,

கோவை மாநகராட்சியின் கீழ் வாலாங்குளம், உக்கடம் பெரியகுளம், முத்தண்ணன் குளம், கிருஷ்ணாம்பதி குளம், சிங்காநல்லூர் குளம் உள்ளிட்ட குளங்கள் உள்ளன. இதில் கோவை சிங்காநல்லூர் குளத்தில் நன்னீர் ஆமைகள், பல்வேறு வகையான பறவைகள் வாழ்கின்றன. இதுதவிர குளக்கரைகளில் வண்ணத்துபூச்சிகள், பல்வேறு வகையான தாவரங்கள் காணப்படுகின்றன.

இதன்காரணமாக இந்த குளம் பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு உயிரினங்களின் வாழ்விடமாக திகழும் இந்த குளத்திற்குள் யாரும் அத்துமீறி நுழையாமல் இருக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் தற்போது இந்த குளத்தில் ஆகாய தாமரைகள் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. இதனால் குளத்தை முற்றிலும் ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமித்து உள்ளது.

மாணவ-மாணவிகள்

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

சிங்காநல்லூர் குளம் பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மாநகராட்சி மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து இந்த குளத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. வாரந்தோறும் மாநகராட்சி பள்ளி மாணவ-மாணவிகள் அழைத்து வரப்பட்டு இந்த குளத்தின் முக்கியத்தும், இங்குள்ள பறவைகள், பூச்சிகள், தாவரங்கள் குறித்து அவர்களுக்கு எடுத்து கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் காரணமாக தற்போது அது நிறுத்தப்பட்டு உள்ளது.

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த குளத்தில் தற்போது ஆகாய தாமரைகள் வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் ஆகாய தாமரை அகற்றப்பட்டது. ஆனால் தற்போது குளத்தை மூடும் அளவிற்கு வேகமாக வளர்ந்து உள்ளது. இதனால் நீர்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த குளத்தில் காணப்படும் ஆகாய தாமரைகளை நிரந்தரமாக அகற்ற வேண்டும்.

ஒவ்வொரு முறையும் ஆகாய தாமரை அகற்றுவதற்கு லட்சம் ரூபாய் செலவு ஆகிறது. எனவே இங்கு நிரந்தரமாக ஊழியர்களை நியமித்து நாள்தோறும் ஆகாயதாமரைகளை அகற்றலாம். மேலும் இந்த குளத்தில் கழிவு நீர் அதிகமா கலக்கிறது. எனவே கழிவு நீர் கலக்காமல் இருக்க ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story