ரம்ஜான் பண்டிகை: வீடுகளில் தொழுகை நடத்திய முஸ்லிம்கள்


ரம்ஜான் பண்டிகை:  வீடுகளில் தொழுகை நடத்திய முஸ்லிம்கள்
x
தினத்தந்தி 26 May 2020 5:16 AM IST (Updated: 26 May 2020 5:16 AM IST)
t-max-icont-min-icon

ரம்ஜான் பண்டிகையையொட்டி கோவை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் அவரவர் வீடுகளிலேயே தொழுகை நடத்தினார்கள்.

கோவை,

முஸ்லிம்கள் நோன்பு மேற்கொண்டு கொண்டாடும் ரம்ஜான் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. வழக்கமாக ரம்ஜான் அன்று அந்தந்த பகுதிளில் உள்ள பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடத்தப்படும். இது தவிர மைதானங்களிலும் தொழுகை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொள்வார்கள்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதனால் பள்ளி வாசல்களில் தொழுகை நடத்தக்கூடாது என்றும், அவரவர் வீடுகளிலேயே தொழுகை நடத்த வேண்டும் என்றும் முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அவரவர் வீடுகளில் தொழுகை

இதைத்தொடர்ந்து கோவை மாவட்டத்தில் அந்தந்த பகுதியில் உள்ள முஸ்லிம்கள் அவரவர் வீடுகளுக்குள் மற்றும் மாடிகளில் சிறப்பு தொழுகை நடத்தினார்கள். அதன்படி கோவை மாவட்டத்தில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் அவரவர் வீடுகளில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத் பொதுசெயலாளர் எம்.ஐ.முகம்மது அலி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உலக வரலாற்றில் பள்ளிவாசல்கள் மூடப்பட்ட வரலாற்றை சந்தித்த இந்த சந்ததிகள், கடந்த அறுபது நாட்களுக்கும் மேலாக பள்ளிவாசல்களில் தொழும் 5 வேளை தொழுகைகள், வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று தொழும் தொழுகை உள்பட எல்லா தொழுகைகளையும் வீடுகளில் தொழுது வந்தனர். தற்போது ரம்ஜான் பண்டிகயையொட்டி வீடுகளிலேயே 4 பேர் கொண்ட கூட்டுத் தொழுகைகள் நடத்தப்பட்டு தங்கள் சிறப்புத் தொழுகையை நிறைவேற்றி ஈகைப் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். முன்னதாக அதிகாலையில் ஈகைத்திருநாளில் தர்மங்கள் ஏழை- எளியோர்களின் இல்லம் சென்று ஆங்காங்கே வழங்கப்பட்டது. கொரோனா பாதிப்பு காரணமாக உணவு வகைகள் பார்சல் செய்யப்பட்டு அக்கம் பக்கத்து வீட்டார், சுற்றத்தார் மற்றும் நண்பர்களுக்கும் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.

Next Story