நாகை அருகே ஓ.என்.ஜி.சி. குழாயில் பயங்கர ‘தீ’ கிராம மக்கள் பீதி
நாகை அருகே ஓ.என்.ஜி.சி. குழாயில் பயங்கரமாக தீ ஜுவாலை தோன்றியதால் கிராம மக்கள் பீதி அடைந்தனர்.
சிக்கல்,
நாகை அருகே ஓ.என்.ஜி.சி. குழாயில் பயங்கரமாக தீ ஜுவாலை தோன்றியதால் கிராம மக்கள் பீதி அடைந்தனர்.
எரிவாயு சேகரிப்பு மையம்
நாகை அருகே கடம்பங்குடியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு சொந்தமான இயற்கை எரிவாயு சேகரிப்பு மையம் இயங்கி வருகிறது. ஓர்குடி, குருமனாங்குடி, பூலாங்குடி உள்ளிட்ட கிராமங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அமைத்துள்ள எண்ணெய் கிணறுகளில் இருந்து குழாய் மூலம் கொண்டு வரப்படும் இயற்கை எரிவாயு கடம்பங்குடி சேகரிப்பு மையத்தில் சேகரிக்கப்பட்டு, பின்னர் நரிமணம் ஆலைக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
கடம்பங்குடியில் உள்ள எரிவாயு சேகரிக்கும் மையத்தில் குறிப்பிட்ட அளவு போக மீதமுள்ள வாயு குழாய் மூலம் ஒரு குறிப்பிட்ட உயரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, இரவு நேரத்தில் வான் வெளியில் வெளியேற்றப்படும். அப்போது அந்த குழாயில் சிறிய அளவிலான தீ ஜுவாலை தோன்றும். இவ்வாறு எரிவாயு வெளியேற்றப்படுவது தினமும் நடைபெற்று வருகிறது.
பயப்பட தேவையில்லை
இந்த நிலையில் சம்பவத்தன்று வழக்கத்துக்கு அதிகமாக எரிவாயு வெளியேறிதாக கூறப்படுகிறது.
இதனால் ஓ.என்.ஜி.சி. குழாயில் இருந்து பெரிய அளவிலான தீ ஜுவாலை வெளியேறியது. இந்த பயங்கர தீ காரணமாக வெப்பமும் அதிகரித்ததால் அந்த பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் பீதி அடைந்து வீடுகளை விட்டு வெளியே வந்து நின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் தாசில்தார் கார்த்திகேயன், அங்கு சென்று ஓ.என்.ஜி.சி. அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார். அப்போது ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள், குழாயில் இருந்து தீ அதிகமாக வெளியேறியதை குறிப்பிட்ட நேரத்தில் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டோம். அதனால் மக்கள் பயப்பட தேவையில்லை’ என்று கூறினர். ஓ.என்.ஜி.சி. குழாயில் திடீரென பயங்கரமாக தீ ஜுவாலை தோன்றியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story