பல்கலைக்கழக தேர்வை நடத்த கோரும் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கு சிவசேனா எதிர்ப்பு


பல்கலைக்கழக தேர்வை நடத்த கோரும் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கு சிவசேனா எதிர்ப்பு
x
தினத்தந்தி 26 May 2020 5:45 AM IST (Updated: 26 May 2020 5:45 AM IST)
t-max-icont-min-icon

பல்கலைக்கழக தேர்வை நடத்த கோரும் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கு சிவசேனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மும்பை, 

கொரோனா பிரச்சினை காரணமாக மராட்டியத்தில் பல்கலைக்கழக தேர்வுகளை நடத்துவதில் குழப்பம் நிலவி வருகிறது. இறுதி ஆண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து விட்டு, அவர்களுக்கு தர நிர்ணய அடிப்படையில் மதிப்பெண் வழங்க வேண்டும் என மாநில உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வித்துறை மந்திரி உதய் சாமந்த் பல்கலைக்கழக மானிய குழுவுக்கு (யு.ஜி.சி.) கடிதம் எழுதினார்.

இதற்கு பல்கலைக்கழகங்களின் வேந்தரும், மாநில கவர்னருமான பகத்சிங் கோஷ்யாரி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படியும், அவ்வாறு தேர்வுகளை நடத்தாவிட்டால் அது யு.ஜி.சி.யின் விதிமுறைகளை மீறுவதாகும் என்றும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதினார்.

கவர்னர் மீது விமர்சனம்

இந்தநிலையில், பல்கலைக்கழக மாணவர்களுக்கு தேர்வை நடத்த கோருவது தொடர்பாக கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை ஆளும் சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-

தற்போதைய சூழலில் பல்கலைக்கழக தேர்வுகளை நடத்துவதை குஜராத் மற்றும் கோவாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆதரவு மாணவர் பிரிவான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.) எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியின் கோரிக்கை ஏன் இதற்கு மாறாக உள்ளது?

ஆர்.எஸ்.எஸ். ஆதரவு கொண்ட பாரதீய ஜனதா மராட்டியத்தில் ஆட்சியில் இல்லாததன் காரணமாகவா?

பல்கலைக்கழக தேர்வுகள் மாநிலத்தின் 10 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்திற்கு முக்கியம் தான். ஆனால் அவர்களின் உடல் நலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அதை நடத்த முடியாது.

அர்த்தம் இல்லை

ஏறக்குறைய அனைத்து அமைப்புகளும் கட்டுப்பாட்டு வரம்புகள் இருக்கும் போது, பல்கலைக்கழகங்கள் சவால்களை சமாளித்து தேர்வுகளை நடத்தும் என்று கவர்னர் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?

முக்கிய பல்கலைக்கழகங்களின் தலைமையகம் அமைந்துள்ள மும்பை, புனே, அவுரங்காபாத் போன்ற நகரங்கள் இன்னும் கொரோனா வைரசின் பிடியில் தான் சிக்கி உள்ளன.

எனவே இந்த நேரத்தில் தேர்வுகளை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுவதில் எந்த அர்த்தமும் இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story