லாரி வாடகை, டீசல் விலை அதிகரிப்பு: நீலகிரியில் கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்தது


லாரி வாடகை, டீசல் விலை அதிகரிப்பு:   நீலகிரியில் கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்தது
x
தினத்தந்தி 26 May 2020 6:07 AM IST (Updated: 26 May 2020 6:07 AM IST)
t-max-icont-min-icon

லாரி வாடகை, டீசல் விலை அதிகரிப்பால் நீலகிரியில் கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்து உள்ளது.

ஊட்டி,

மலை மாவட்டமான நீலகிரி அதிக வனப்பகுதிகளை கொண்டு உள்ளதோடு, சுற்றுச்சூழல் நிறைந்து காணப்படுகிறது. நீலகிரியின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பாறைகளை உடைக்க, மணல் அள்ள தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் நிலத்தடி நீரை தக்க வைக்கவும், பாறைகளில் அதிர்வு ஏற்படாமல் இருக்கவும் ஆழ்குழாய் கிணறு அமைக்க அனுமதி இல்லை. பொக்லைன் எந்திரம் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

கோவை மாவட்டத்தில் இருந்து கட்டுமான பொருட்களான ஆற்று மணல், எம்.சாண்ட், ஆற்று மணல், ஜல்லி, செங்கல் போன்றவை லாரிகளில் நீலகிரிக்கு கொண்டு வரப்படுகிறது. அதை கொண்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

விலை உயர்வு

இதற்கிடையில் ஊரடங்கு உத்தரவால் அனைத்து போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. மேலும் கட்டுமான பணிகளும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. சமீபத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, கட்டுமான பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. மேலும் கட்டுமான பொருட்கள் விற்கும் கடைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதனால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கட்டுமான பணிகள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. வேலையிழந்த தொழிலாளர்கள் கூலி வேலைக்கு சென்று இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.

பலரும் கட்டுமான பணிகளுக்காக சரக்கு வாகனங்கள் மூலம் தங்களுக்கு தேவையான செங்கல், மணல் போன்றவற்றை வாங்கி செல்வதை காண முடிகிறது. ஊரடங்குக்கு முன்னால் கட்டுமான பொருட்களின் விலை குறைந்து இருந்தது. தற்போது விலை கிடு, கிடு என உயர்ந்து உள்ளது. வீட்டின் தரைத்தளத்தில் பதிக்கப்படும் டைல்ஸ் விலை 5 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

கட்டணம்

இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

கோவை, மேட்டுப்பாளையத்தில் இருந்து கட்டுமான பொருட்கள் ஊட்டிக்கு கொண்டு வரப்படுகிறது. ஒரு செங்கல் ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லாரி லோடில் 5 ஆயிரம் செங்கல் வரவழைக்கப்படுகிறது. ஒரு செங்கலுக்கு 50 பைசா விலை உயர்ந்து உள்ளது.

ஆற்று மணல் ஒரு யூனிட் விலை ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.9 ஆயிரமாக அதிகரித்து இருக்கிறது. ஒரு யூனிட் ஜல்லி ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.5,500 ஆக விலை உயர்ந்து உள்ளது. ஒரு மூட்டை சிமெண்ட் ரூ.390 விற்பனை ஆனது. ஊரடங்குக்கு பின்னர் ரூ.430-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு காரணம் டீசல் விலை மற்றும் லாரி வாடகை கட்டணம் அதிகரித்ததே ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story