ஊரடங்கு நீட்டிப்பு எதிரொலி கொய்மலர் விலை கடும் வீழ்ச்சி விவசாயிகள் கவலை
ஊரடங்கு நீட்டிப்பு எதிரொலியாக கொய்மலர் விலை கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து இருக்கின்றனர்.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பச்சை தேயிலைக்கு கடும் விலை வீழ்ச்சி ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் மாற்று விவசாயம் மேற்கொள்ளும் வகையில் அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொய்மலர் சாகுபடியை தொடங்குவதற்கு குடில்கள் அமைக்க 50 சதவீத மானியத்தை அறிவித்தார். அதனை தொடர்ந்து விவசாயிகள் பலர் விளைநிலங்களில் பசுமை குடில்கள் அமைத்து, கொய்மலர் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இதனால் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை குறைந்த நபர்களை கொண்டு எளிமையாக நடத்த வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது. போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்ட காரணத்தால் கொய்மலர் விற்பனை பாதிக்கப்பட்டு உள்ளது.
விலை வீழ்ச்சி
இருப்பினும் உரிய நேரத்தில் கொய்மலர்களை அறுவடை செய்யாமல் விட்டால் செடிகளும் பாதிக்கப்படும். இதனால் விவசாயிகள் மலர்களை அறுவடை செய்து, ஒரு சில பூக்கடைகளுக்கு மட்டும் குறைந்த அளவு விற்பனை செய்து விட்டு, மீதம் உள்ள மலர்களை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர். மேலும் விலையும் கடுமையாக வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதன் காரணமாக பசுமை குடில்கள் பராமரிப்பு செலவு, தொழிலாளர்களுக்கு சம்பளம் போன்றவற்றை சமாளிக்க முடியாமல் விவசாயிகள் திண்டாடி வருகின்றனர்.
மேலும் வெளியிடங்களுக்கு விற்பனைக்காக அனுப்ப முடியாததால், விளைந்த கொய்மலர்கள் அறுவடை செய்யாமல் விடப்பட்டு உள்ளது. இதனால் மலர்கள் பூத்தும் வீணாகிறது. மேலும் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இதுகுறித்து மிளிதேன் விவசாயி மேகநாதன் கூறியதாவது:-
ரூ.50-க்கு கொள்முதல்
பசுமை குடில் அமைத்து கொய்மலர் செடிகளை நட்டு சாகுபடி செய்ய ரூ.50 லட்சம் வரை முதலீடு செய்ய வேண்டி உள்ளது. வங்கி கடன் பெற்று வெளிநாட்டில் இருந்து 10 தண்டுகள் கொண்ட ஒரு கொத்து லில்லியம் வகை கொய்மலர் விதைகளை ரூ.300-க்கு வாங்குகிறோம். ஒரு சீசனில் கொய்மலர் சாகுபடி செய்ய ரூ.30 லட்சம் தேவைப்படுகிறது. ஊரடங்கால் அறுவடை செய்த கொய்மலர்களை விற்பனை செய்ய முடியாததால் முதலீடு வீணாகி வருகிறது. அறுவடை செய்யப்பட்ட ஒரு கொத்து லில்லியம் வகை கொய்மலர்கள் சீசனின் போது ரூ.500 வரை கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. தற்போது ரூ.50-க்கு கொள் முதல் செய்யப்படுகின்றன. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.
கடன் தள்ளுபடி
கார்னேசன் வகை கொய்மலர்கள் ரூ.20 முதல் ரூ.40 வரை விற்பனை ஆனது. தற்போது ரூ.10-க்கு விற்பனையாகிறது. ஊரடங்கு காரணமாக கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கு கொய்மலர்களை விற்பனைக்கு அனுப்ப முடியாத நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் வங்கி கடனை கட்ட முடியாத சூழ்நிலை காணப்படுகிறது. வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளின் நலன் கருதி, மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் கொய்மலர் விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை மூலம் நிவாரண தொகை வழங்க முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story