கணவன்-மனைவி உள்பட மும்பையில் இருந்து குமரிக்கு வந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு 59 ஆக உயர்வு
மும்பையில் இருந்து குமரிக்கு வந்த கணவன், மனைவி உள்பட 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் குமரி மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது.
நாகர்கோவில்,
மும்பையில் இருந்து குமரிக்கு வந்த கணவன், மனைவி உள்பட 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் குமரி மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது.
மும்பையில் இருந்து வந்தவர்கள்
குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நேற்று முன்தினம் வரை 56 ஆக இருந்தது. அவர்களில் 25 பேர் முழுமையாக குணமாகி வீடு திரும்பி விட்டனர். ஒரு முதியவர் இறந்து விட்டார். 28 பேர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கேரளாவில் ஒரு குழந்தையும், சென்னையில் ஒரு பெண்ணும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்தநிலையில் மும்பையில் இருந்து கணவன், மனைவி உள்பட 4 பேர் சென்னை வந்தனர். இவர்களுடைய சொந்த ஊர் நாகர்கோவில் அருகே உள்ள தேரேகால்புதூர் நாஞ்சில் நகர் ஆகும். பின்னர் சென்னையில் இருந்து கார் மூலம் குமரி மாவட்டம் வந்தனர். நேற்று முன்தினம் அவர்களுக்கு ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு, கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து கன்னியாகுமரியில் உள்ள தங்கும் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
3 பேருக்கு கொரோனா
நேற்று இரவு அதற்கான பரிசோதனை முடிவுகள் வந்தது. இதில் 45 வயது மதிக்கத்தக்க ஆண், 38 வயது மதிக்கத்தக்க அவருடைய மனைவி, 17 வயதுள்ள அவருடைய மகள் ஆகிய 3 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மற்றொருவருக்கு கொரோனா இல்லை.
இதையடுத்து 3 பேரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கன்னியாகுமரி தனிமைப்படுத்தும் முகாமில் இருந்து ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவர்களுடன் வந்தவர் தனிமைப்படுத்தும் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்னொரு பரிசோதனை செய்து அதிலும் அவருக்கு கொரோனா இல்லை என்றால் அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று டாக்டர் கள் தெரிவித்தனர்.
59 ஆக உயர்வு
புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 3 பேருடன் குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக் கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. மேலும், ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்தது.
Related Tags :
Next Story