ஊரடங்கில் இருந்து விலக்கு அளித்தும் வருமானமின்றி தவிக்கும் ஆட்டோ டிரைவர்கள் சவாரிக்கு ஒருவர் என்ற நிபந்தனையை மாற்ற கோரிக்கை


ஊரடங்கில் இருந்து விலக்கு அளித்தும்  வருமானமின்றி தவிக்கும் ஆட்டோ டிரைவர்கள்  சவாரிக்கு ஒருவர் என்ற நிபந்தனையை மாற்ற கோரிக்கை
x
தினத்தந்தி 26 May 2020 6:46 AM IST (Updated: 26 May 2020 6:46 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கில் இருந்து விலக்கு அளித்தும் நீலகிரி மாவட்டத்தில் ஆட்டோ டிரைவர்கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர். மேலும் சவாரிக்கு ஒருவர் என்ற நிபந்தனையை மாற்ற கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கூடலூர்,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி அனைத்து வகையான வாகன போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு ஒவ்வொன்றாக ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டது. அதன்படி ஊரடங்கில் இருந்து விலக்கு அளித்து, கட்டுப்பாடுகளுடன் ஆட்டோக்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதன்படி தமிழகத்தில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஆட்டோக்களை இயக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் சவாரிக்கு ஒரு நபரை மட்டுமே அழைத்து செல்ல வேண்டும் என்று நிபந்தனை விதித்தது.

ஆட்டோக்களின் நகரம்

நீலகிரி மாவட்டத்தை பொருத்தவரை கூடலூர் பகுதியில் மட்டும் 2,500 ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. பெரும்பாலான மக்கள் போக்குவரத்துக்கு ஆட்டோக்களையே பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ஆட்டோக்களின் நகரம் என்றும் கூடலூர் அழைக்கப்படுகிறது.

குறிப்பாக கூடலூரில் இருந்து தொரப்பள்ளி, புத்தூர்வயல், நெம்பாலக்கோட்டை, காமராஜ் நகர், மேல்கூடலூர், 27-வது மைல், சளிவயல், கோழிப்பாலம் என்பன உள்பட பல்வேறு குக்கிராமங்களுக்கு ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. ஆட்டோவில் ஒரே கிராமத்தை சேர்ந்த 3 பேர் பயணம் செய்து, அதற்குரிய கட்டணத்தை பகிர்ந்து அளித்துக்கொண்டு கூடலூருக்கு வந்து அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதுதான் நடை முறையில் இதுவரை உள்ளது.

வருமானமின்றி தவிப்பு

ஆனால் ஊரடங்கு கட்டுப்பாட்டால் சவாரிக்கு ஒரு நபர் மட்டும் ஆட்டோவில் வரும் நிலை உள்ளது. இதனால் 3 பேருடன் பகிர்ந்த ஆட்டோ கட்டணத்தை ஒரே நபர் ஏற்று கொள்ளும் நிலை உள்ளது. இதனால் ஆட்டோக்களை பொதுமக்கள் பயன்படுத்துவது மிகவும் குறைந்து விட்டது. இதுகுறித்து கூடலூர் ஆட்டோ டிரைவர்கள் கூறும்போது, ஊரடங்கில் இருந்து விலக்கு அளித்தாலும், சவாரிக்கு ஒரு நபரை மட்டும் அழைத்து செல்ல வேண்டும் என்ற நிபந்தனையால் ஆட்டோ டிரைவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதனால் வருவாய் இன்றி தவித்து வருகின்றோம். எனவே அந்த நிபந்தனையை மாற்றி, சவாரிக்கு 2 பேரையாவது அழைத்து செல்ல அரசு அனுமதிக்க வேண்டும். இதன் மூலம் ஆட்டோ தொழில் பெரிய அளவில் பாதிக்கப்படாமல் இருக்கும் என்றனர்.

Next Story