கேரள ஆஸ்பத்திரியில் உறுதி செய்யப்பட்டது குமரி மீனவருக்கு கொரோனா பாதிப்பு மீனவ கிராமம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு
குமரி மாவட்டம் மார்த்தாண்டன்துறையில் மீனவருக்கு கொரோனா பாதிப்பு கேரள ஆஸ்பத்திரியில் உறுதி செய்யப்பட்டது.
கொல்லங்கோடு,
குமரி மாவட்டம் மார்த்தாண்டன்துறையில் மீனவருக்கு கொரோனா பாதிப்பு கேரள ஆஸ்பத்திரியில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மார்த்தாண்டன்துறை மீனவ கிராமத்தில் ஒரு பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
ரத்த வாந்தி எடுத்தார்
குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே மார்த்தாண்டன்துறை சங்குவிளாகம் பகுதியை சேர்ந்த 38 வயதுடைய மீனவருக்கு மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். இவர் கடந்த 21-ந் தேதி இரவு தனது தம்பி உள்பட 5 பேருடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். மீன்பிடித்து கொண்டிருந்த போது மீனவர் திடீரென ரத்த வாந்தி எடுத்தார்.
உடனே, சக மீனவர்கள் அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து மீனவரின் மனைவிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மனைவி விரைந்து வந்து மீனவரை அருகில் இருந்த ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வேறு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு கூறினர். தொடர்ந்து கேரள மாநிலம் பொழியூரை சேர்ந்த ஒருவருடைய காரில் பாறசாலையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்தும் அவரை திருப்பி அனுப்பினர்.
தொற்று உறுதி
உடனே அவர்கள் காரில் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கும் அவருக்கு சிகிச்சை செய்யாமல் திருப்பி அனுப்பினர். இதையடுத்து மீனவரை ஆம்புலன்ஸ் மூலம் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ரத்த வாந்திக்கான காரணம் குறித்து பரிசோதனை செய்த போது அவருக்கு ரத்த புற்று நோய் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ரத்த புற்றுநோய்க்கான சிகிச்சை மேற்கொண்டனர். அத்துடன் அவருக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது. பரிசோதனை முடிவு வெளியான போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கேரள சுகாதாரத்துறையினர் குமரி மாவட்ட கலெக்டரிடம் தகவல் தெரிவித்தனர். உடனே, மார்த்தாண்டன்துறை பகுதியில் சுகாதார பணிகள் முடுக்கி விடப்பட்டன.
தனிமைப்படுத்தினர்
முன்சிறை வட்டார தலைமை டாக்டர் ராஜேஷ், கொல்லங்கோடு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஸ்ரீஜீ, கிள்ளியூர் தாசில்தார் ராஜசேகர், கொல்லங்கோடு சுகாதார துறை ஆய்வாளர்கள் ஷீபா, ஷாஜின், இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் மற்றும் மருத்துவ செவிலியர்கள் மார்த்தாண்டன்துறை பகுதிக்கு சென்று சுகாதார பணிகள் மேற்கொண்டனர். குறிப்பாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபருடன் தொடர்புடையவர்களை கணக்கெடுத்து அவர்களில் யாருக்காவது சளி, காய்ச்சல் போன்ற அறிகுறி உள்ளதா என பரிசோதனை செய்தனர். மேலும், மீனவரின் குடும்ப உறுப்பினர்கள், ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற கார் டிரைவர், அவருடன் கடலுக்கு சென்ற மீனவர்கள் ஆகியோரின் ரத்த மாதிரிகள் மற்றும் சளி போன்றவற்றை சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பாதிக்கபட்ட நபருடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களை அவர்களது வீடுகளிலேயே முக கவசம், சமூக இடைவெளியுடன் தங்கி இருக்க உத்தரவிட்டனர். அத்துடன் அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தல் ஸ்டிக்கர் ஒட்டினர்.
சாலைகள் மூடல்
மார்த்தாண்டன்துறையில் பாதிக்கபட்ட நபரின் வீடு இருக்கும் பகுதியில் 200 வீடுகளை அதிகாரிகள் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்து அந்த பகுதியை தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவித்தனர். அந்த பகுதிக்கு செல்லும் சாலைகள் தடுப்பு வேலியால் மூடப்பட்டது. பேரூராட்சி ஊழியர்கள் முகாமிட்டு தடை செய்யப்பட்ட பகுதியில் கிருமி நாசினி தெளிப்பு, பிளச்சிங் பவுடர் தூவுதல் போன்ற பணிகளை மேற்கொண்டனர்.
தற்போது கொரோனா பாதிக்கபட்ட நபர் சமீபத்தில் வெளி மாநிலங்களுக்கோ, வெளிநாட்டுக்கோ செல்லவில்லை என கூறப்படுகிறது. மேலும், கடலில் மீன்பிடிக்க செல்வதை தவிர வெளி ஆட்களுடன் அதிகம் தொடர்பு இல்லாதவர் என்றும் தெரிகிறது. அவ்வாறு இருக்கும் நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது எப்படி என்பது தெரியாமல் அதிகாரிகள் தவித்து போய் நிற்கின்றனர். இந்த நபரால் மேலும் எத்தனை பேருக்கு பரவி இருக்குமோ என்ற அச்சத்திலும் அதிகாரிகள் உள்ளனர்.
மீனவ கிராமத்தில் வீடுகள் ஒவ்வொன்றும் இடைவெளி இல்லாமல் நெருக்கமாக இருக்கும். இந்தநிலையில் மீனவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story