சென்னையில் இருந்து வந்த தந்தை-மகளுக்கு கொரோனா: போலீசுக்கு தெரியாமல் குமரிக்குள் நுழைந்தது அம்பலம்


சென்னையில் இருந்து வந்த தந்தை-மகளுக்கு கொரோனா: போலீசுக்கு தெரியாமல் குமரிக்குள் நுழைந்தது அம்பலம்
x
தினத்தந்தி 26 May 2020 1:40 AM GMT (Updated: 26 May 2020 1:40 AM GMT)

சென்னையில் இருந்து குமரிக்கு வந்த தந்தை- மகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவர்கள் போலீசுக்கு தெரியாமல் குமரிக்குள் நுழைந்தது அம்பலமாகி உள்ளது.

கன்னியாகுமரி, 

சென்னையில் இருந்து குமரிக்கு வந்த தந்தை- மகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவர்கள் போலீசுக்கு தெரியாமல் குமரிக்குள் நுழைந்தது அம்பலமாகி உள்ளது. அவர்களுடன் நெருங்கி பழகிய உறவினர்கள் 10 பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டது.

தந்தை-மகளுக்கு கொரோனா

சென்னை உள்பட வெளி மாவட்டங்களில் இருந்து குமரிக்கு வருபவர்கள் ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு, கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இந்த விதிமுறையை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக கடைப்பிடித்து வருகிறது. அதே சமயத்தில், அவ்வாறு வரும் நபர்கள் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு குமரிக்குள் அத்துமீறி நுழைந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், தனிமைப்படுத்தும் இந்த நடைமுறையை அலட்சியப்படுத்தி விட்டு குமரிக்குள் நுழைந்த தந்தை, மகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இவர்கள் மூலமாக மற்றவர்களுக்கும் கொரோனா பரவ வாய்ப்பு இருப்பதாக அச்சமும் உருவாகி உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

போலீசாருக்கு

தெரியாமல் நுழைந்தார்

சென்னையில் இருந்து 38 வயது மதிக்கத்தக்க தந்தை (முன்னாள் ராணுவ வீரர்), அவருடைய 2 மகள்களுடன் சொந்த ஊரான குமரிக்கு காரில் புறப்பட்டனர். மூத்த மகளுக்கு 13 வயது, இளைய மகளுக்கு 8 வயது. இவர்கள் முறைப்படி இ-பாஸ் வாங்கவில்லை. குமரிக்குள் நுழையும் போது போலீசாரின் கெடுபிடி அதிகமாக இருப்பதை அவர் தெரிந்துள்ளார்.

குமரி மாவட்ட எல்லையை வந்தடைந்ததும் காரை நிறுத்தியுள்ளார். காருடன் குமரிக்குள் நுழைந்தால், போலீசார் பிடித்து தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி விடுவார்கள் என நினைத்த அவர், உறவினர் ஒருவரை தொடர்பு கொண்டு மோட்டார் சைக்கிளை கொண்டு வரும்படி கூறியுள்ளார். பின்னர் அந்த மோட்டார் சைக்கிள் மூலமாக ஒருவழியாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு சொந்த ஊரான கொட்டாரம் அச்சங்குளம் சங்கர் படிப்பக தெருவுக்குள் நுழைந்தார். 22-ந் தேதி வீட்டில் இருந்த அவர், பின்னர் நெருங்கிய உறவினர்களுடன் பழகியதாக தெரிகிறது.

தடை செய்யப்பட்ட

பகுதியாக அறிவிப்பு

அப்போது, சென்னையில் இருந்து வந்த நபருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாத விவரம் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதனை அறிந்த பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து தந்தை, 2 மகள்களும் உடனடியாக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கு கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி எடுத்து அனுப்பப்பட்டது. இந்த பரிசோதனை முடிவில், தந்தைக்கும், மூத்த மகளுக்கும் கொரோனா தொற்று இருந்தது தெரிய வந்தது. இதனை அறிந்த சங்கர் படிப்பக தெரு மக்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். அதாவது, தங்களுக்கும்

கொரோனா தொற்று இருக்குமோ என்ற பீதி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் நேற்று அச்சங்குளம் பகுதிக்கு சென்று தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்தனர். அந்த வகையில் 29 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

சளி மாதிரி சேகரிப்பு

மேலும், அங்கு பேரிகார்டுகள் வைத்து அடைத்ததோடு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. இதனை தொடர்ந்து முன்னாள் ராணுவ வீரர் நெருங்கி பழகிய உறவினர்கள் யாரென்ற விவரத்தை சேகரித்தனர்.

பின்னர் அந்த பகுதியை சேர்ந்த 10 பேரிடம் கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்பட்டது. இதற்கிடையே, முன்னாள் ராணுவ வீரரிடம் நெருங்கி பழகிய அவருடைய அக்காளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்தது.

இவர், பேரூராட்சி அலுவலக ஊழியராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரிசோதனைக்கான பணியில் அகஸ்தீஸ்வரம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வர்கீஸ் ராஜா, மருத்துவ அதிகாரி சக்தி, கன்னியாகுமரி சுகாதார ஆய்வாளர் செல்வரெங்கன், வருவாய் ஆய்வாளர் செய்யது இப்ராகிம் ஆகியோர் ஈடுபட்டனர்.

கிருமிநாசினி தெளிப்பு

மேலும், தடை செய்யப்பட்ட பகுதியில் பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரேசன் உத்தரவின் பேரில் கொரோனா தடுப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. அதாவது, பிளச்சிங் பவுடர் போடுதல், கிருமி நாசினி தெளித்தல் போன்ற பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டனர். தனிமைப்படுத்துதலை மீறி அலட்சியமாக இருந்ததால் தான் இதுபோன்ற கட்டுப்பாடு ஏற்படுத்தப்படுகிறது.

எனவே சென்னை மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் நபர்கள் யாரேனும் குமரிக்கு வந்தால் கட்டாயம் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அதே சமயத்தில், வெளியூரில் இருந்து வருபவர்கள் பற்றி பொதுமக்களும் அறிந்தால், மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story