கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி: ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் வீடுகளில் சிறப்பு தொழுகை


கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி: ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் வீடுகளில் சிறப்பு தொழுகை
x
தினத்தந்தி 26 May 2020 1:50 AM GMT (Updated: 26 May 2020 1:50 AM GMT)

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரம்ஜான் பண்டிகையையொட்டி நேற்று பள்ளிவாசல்கள் வெறிச்சோடி கிடந்தன. இருப்பினும் முஸ்லிம்கள் தங்கள் வீடுகளிலேயே சிறப்பு தொழுகை நடத்தினர்.

நாமக்கல்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இதையொட்டி பள்ளிவாசல்கள் அனைத்தும் 2 மாதங்களாக மூடப்பட்டு உள்ளன. அங்கு முஸ்லிம்கள் கூட்டமாக கூடி தொழுகை நடத்த அனுமதி இல்லை. எனவே நேற்று ரம்ஜான் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்கள் முஸ்லிம்கள் இன்றி வெறிச்சோடி இருந்தன.

இருப்பினும் நாமக்கல்லில் முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து தங்கள் வீடுகள் மற்றும் வீடுகளில் உள்ள மொட்டை மாடிகளில் சிறப்பு தொழுகை நடத்தி ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினர். பின்னர் ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளை வழங்கினார்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பிரியாணி வழங்கியும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

இதையொட்டி நாமக்கல் பேட்டை அஞ்சுமனே பள்ளிவாசல், கோட்டை பள்ளிவாசல் உள்ளிட்ட பள்ளிவாசல்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அரசின் உத்தரவை மீறி யாராவது தொழுகைக்கு வருகிறார்களா? என கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் பள்ளிவாசல்கள் மற்றும் சிறப்பு தொழுகை நடைபெறும் ஈத்கா மைதானங்கள் என 60 இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

Next Story