உரக்கடை அதிபரை தாக்கி ரூ.16 லட்சம் கொள்ளை: கொள்ளையர்களை பிடிக்க 10 தனிப்படைகள் அமைப்பு


உரக்கடை அதிபரை தாக்கி ரூ.16 லட்சம் கொள்ளை:   கொள்ளையர்களை பிடிக்க 10 தனிப்படைகள் அமைப்பு
x
தினத்தந்தி 26 May 2020 7:29 AM IST (Updated: 26 May 2020 7:29 AM IST)
t-max-icont-min-icon

உரக்கடை அதிபரை தாக்கி ரூ.16 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கொள்ளையர்களை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

உடுமலை, 

திருப்பூர் மாவட்டம் உடுமலை எலையமுத்தூர் பிரிவு அருகே வசித்து வருபவர் வி.பழனிசாமிகவுண்டர் (வயது 75). இவர் உடுமலை தளி சாலையில் டி.வி.பட்டிணம் மற்றும் உடுப்பி சாலை ஆகிய 2 இடங்களில் உரக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மகன் பாலமுருகனும் அந்த உரக்கடைகளை கவனித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 24-ந்தேதி அதிகாலை முகமூடி அணிந்த மர்ம ஆசாமிகள் 3 பேர் இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பழனிசாமி கவுண்டரை அரிவாளால் வெட்டி அவரை துணியால் கட்டி போட்டனர். அங்கிருந்த லாக்கரில் வைக்கப்பட்டு இருந்த ரூ.16 லட்சத்தை கொள்ளையடித்த கும்பல் வீட்டில் நிறுத்தி இருந்த ஒரு காரை கடத்தி கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

இது குறித்த தகவலின் பேரில் நேற்று முன்தினம் மாலை கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பெரியய்யா உடுமலைக்கு வந்து சம்பவம் நடந்த வீட்டை பார்வையிட்டார். அப்போது கொள்ளையர்களை விரைந்து பிடிக்க போலீசாருக்கு அவர் அறிவுறுத்தினார்.

10 தனிப்படைகள் அமைப்பு

இதற்கிடையே கொள்ளையர்கள் கடத்தி சென்ற காரை தீபாலபட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி முன்பு நிறுத்தி விட்டு தப்பி சென்று விட்டனர். அந்த காரை போலீசார் கைப்பற்றி உடுமலை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் புகழேந்தி (உடுமலை), ஓம்பிரகாஷ் (குடிமங்கலம்), ராஜாகண்ணன்(மடத்துக்குளம்), அன்னம்(தளி) ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர குற்றப்பிரிவு போலீஸ் ஏட்டுகள், போலீசார் ஆகியோரை கொண்ட 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 10 தனிப்படைகளில் 32 பேர் இடம் பெற்று உள்ளனர். இந்த தனிப்படை போலீசார் பல்வேறு வியூகங்களில் தங்கள் விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர்.

தீவிர விசாரணை

கொள்ளை நடப்பதற்கு முன்பாக கொள்ளையர்கள் சம்பந்தப்பட்ட வீட்டுக்கு எப்படி வந்தார்கள். சாலையில் அவர்கள் வந்த போது அப்பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் காட்சி எதுவும் பதிவாகி இருக்கிறதா? காரில் தப்பி செல்லும் போது கொள்ளையர்களின் உருவம் ஏதேனும் சிக்னலில் உள்ள கேமராக்களில் பதிவாகி இருக்கிறதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் கொள்ளையர்களை கைது செய்து விடுவோம் என போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Next Story