திருப்பூர் அரசு மருத்துவமனையில் 6 பேருக்கு கொரோனா பரிசோதனை மாலத்தீவில் இருந்து வந்தவரும் கண்காணிப்பு
திருப்பூர் அரசு மருத்துவமனையில் 6 பேருக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாலத்தீவில் இருந்து வந்தவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
திருப்பூர்,
திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள், கொரோனா சந்தேகம் ஏற்படுகிறவர்கள் என பலரும் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். இவ்வாறு வருகிறவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த கொரோனா பரி சோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுகிறவர்கள், மேல்சிகிச்சைக்காக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுகிறார்கள். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்து, வீடு திரும்புகிறார்கள். தற்போது கடந்த 2-ந் தேதிக்கு பிறகு திருப்பூர் மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா தொற்று புதிதாக ஏற்படவில்லை.
6 பேருக்கு பரிசோதனை
இந்த நிலையில் திருப்பூர் அரசு மருத்துவமனையில் நேற்று சந்தேகத்தின் திருப்பூர் போயம்பாளையம் கங்காநகரை சேர்ந்த 42 வயது ஆண் மற்றும் திருப்பூர் ஓம்சக்தி கோவில் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த 32 வயது ஆண் உள்பட 6 பேருக்கு கொரோனா பரிசோதனை (ஸ்வாப் பரிசோதனை) செய்யப்பட்டுள்ளது. அவர்களது சளி மற்றும் ரத்த மாதிரியும் சேகரிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான பரிசோதனை முடிவுகள் விரைவில் தெரியவரும்.
இதில் கொரோனா தொற்று இருப்பவர்கள் மேல்சிகிச்சைக்காக கோவை இ.எஸ்.ஐ. அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுபோல் மாலத்தீவில் இருந்து வந்த உடுமலை பகுதியை சேர்ந்த 39 வயது ஆண் ஒருவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
Related Tags :
Next Story