பல்லடத்தில் கறிக்கோழி விலை கிடுகிடு உயர்வு
ஊரடங்கு காரணமாக விற்பனை சரிந்து இருந்த கறிக்கோழி விலை தற்போது கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கறிக்கோழி உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. இங்கிருந்து கறிக்கோழிகள் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கறிக்கோழிகள் மூலமாகவும் கொரோ னா வைரஸ் பரவும் என வதந்திகள் பரவின. இதனால் கறிக்கோழி விற்பனை பாதித்தது.
வதந்தியை முறியடிக்க கறிக்கோழி உற்பத்தி செய்யும் பண்ணையாளர்கள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனர். ஒரு கோழி வாங்கினால் ஒரு கோழி இலவசம் என்றும் கொரோனா வைரஸ் கோழிகள் மூலம் பரவாது என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதைத்தொடர்ந்து கறிக்கோழி விலை சரிந்தது. போதிய விலை கிடைக்காததால் உற்பத்தியாளர்கள் மற்றும் கடைக்காரர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர்.
கிடுகிடு உயர்வு
தற்போது ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு, இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதனால் பொதுமக்கள் இறைச்சிக் கடைகளை நாடிவருகின்றனர். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், நேற்று ரம்ஜான் பண்டிகை என்பதாலும் இறைச்சி கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் தற்போது அதிக அளவில் விரும்பி வாங்கி வருவதால் கறிக்கோழி விலை கிடுகிடுவென உயர்ந்தது.
இதனால் நேற்று கறிக்கோழியின் விலை கிலோவுக்கு சுமார் ரூ.200 முதல் ரூ.240 வரை விற்பனை செய்யப்பட்டது. ஊரடங்கால் வேலையிழந்த பொதுமக்கள் போதிய பணப்புழக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வரும் நிலையில் இந்த விலை உயர்வு அசைவ பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இருப்பினும் வேறுவழியின்றி பொதுமக்கள் கறிக்கோழிகளை விரும்பி வாங்கிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story