ரம்ஜான் பண்டிகை; வீடுகளில் சிறப்பு தொழுகை நடத்திய முஸ்லிம்கள்


ரம்ஜான் பண்டிகை; வீடுகளில் சிறப்பு தொழுகை நடத்திய முஸ்லிம்கள்
x
தினத்தந்தி 26 May 2020 8:35 AM IST (Updated: 26 May 2020 8:35 AM IST)
t-max-icont-min-icon

ரம்ஜான் பண்டிகையையொட்டி சேலத்தில் முஸ்லிம்கள் தங்களது வீடுகளில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

சேலம்,

முஸ்லிம்களின் 5 கடமைகளில் ஒன்று நோன்பு கடைபிடிப்பது ஆகும். சிறப்புக்குரிய புனித ரமலான் மாதத்தில் 30 நாட்களும் நோன்பு கடைபிடிப்பார்கள். தற்போது கொரோனா வைரஸ் பரவல் தாக்கம் உலகளவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைகட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டங்களாக இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மத வழிபாட்டு தலங்களுக்கு செல்ல அனுமதி இல்லை. அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக ரம்ஜான் பண்டிகையை நேற்று முஸ்லிம்கள் மிக எளிமையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

அதாவது பள்ளிவாசல் மற்றும் முக்கிய இடங்களுக்கு செல்லாமல் தங்களது வீடுகளில் உறவினர்களுடன் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். சேலம் மாநகர் பகுதியில் முஸ்லிம்கள் தங்களது வீடுகளிலும், வீட்டின் மொட்டை மாடிகளிலும் ரம்ஜான் தொழுகையில் ஈடுபட்டனர். ஒரு சில இடங்களில் சாமியானா பந்தல் அமைத்து முக கவசம் அணிந்தவாறு சமூக இடைவெளியுடன் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

சேலம் கோட்டை, செவ்வாய்பேட்டை, சூரமங்கலம், ஜாகீர் அம்மாபாளையம், கடைவீதி, அஸ்தம்பட்டி, அன்னதானப்பட்டி, தாதகாப்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் முஸ்லிம்கள் தங்களது வீடுகளிலேயே சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ரம்ஜான் பண்டிகையை மிக எளிமையாக கொண்டாடி மகிழ்ந்தனர். இதையடுத்து முஸ்லிம்கள் ஏழைகளுக்கு புத்தாடை, உணவு பொட்டலங்கள் உள்ளிட்டவற்றை தானமாக வழங்கினர். முஸ்லிம்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். இதுகுறித்து சேலம் ஜாமியா மஸ்ஜித் முன்னாள் முத்தவல்லி நாசர் கான் நிருபர்களிடம் கூறியதாவது-

ஊரடங்கு அமலில் உள்ளதால் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை செய்ய முடியாத சூழ்நிலையில் முஸ்லிம்கள் அனைவரும் தங்களது வீடுகளில் உறவினர்களுடன் ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் சிறப்பு தொழுகை நடைபெற்றது. உலகையே ஆட்டி படைக்கும் கொரோனா வைரசிலிருந்து மக்கள் விரைவில் விடுபட வேண்டும். கொரோனா வைரஸ் பாதித்த அனைவரும் குணமடைந்து வீடு திரும்ப வேண்டியும் இந்த ரம்ஜான் பண்டிகை நாளில் சிறப்பு பிரார்த்தனை செய்தோம்.

பொதுவாக ரம்ஜான் சிறப்பு தொழுகையை பள்ளிவாசல்களிலும், திடல்களிலும் ஒன்றாக கூடி நடத்துவார்கள். ஆனால் தற்போது ஊரடங்கு காரணமாக முஸ்லிம்கள் அனைவரும் கனத்த இதயத்துடன் தங்களது வீடுகளில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். மத்திய, மாநில அரசுகள் கூறும் அறிவுரைகளை கேட்டு பொதுமக்கள் அனைவரும் பின்பற்றினால் கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் ஆத்தூர், வாழப்பாடி, எடப்பாடி, தம்மம்பட்டி, ஓமலூர், கெங்கவல்லி, சங்ககிரி, மேட்டூர் உள்பட பல்வேறு இடங்களில் முஸ்லிம்கள் தங்களது வீடுகளிலேயே சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ரம்ஜான் பண்டிகையை மிக எளிமையாக கொண்டாடினர். மேலும் பள்ளிவாசல்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Next Story