சேலம் வந்த 2 பெண்கள் உள்பட 6 பேருக்கு கொரோனா
மராட்டியத்தில் இருந்து சேலம் வந்த 2 பெண்கள் உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் 35 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் சிகிச்சை பெற்றனர். இவர்கள் அனைவரும் குணமாகி விட்டதால் ‘டிஸ்சார்ஜ்‘ செய்யப்பட்டனர். இதையடுத்து வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து சேலம் வருபவர்களை மாவட்ட எல்லையிலேயே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
வெளி மாநிலங்களில் இருந்து வந்த 17 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்த சேலம் மாவட்டம் ஆத்தூர், ஏத்தாப்பூர், ஓமலூர், போடிநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 6 பேருக்கு மாவட்ட எல்லையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்கள் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதில் அவர்கள் 6 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58-ஆக உயர்ந்துள்ளது.
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களை சேர்ந்த 39 பேர் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story