பெரியார் பஸ் நிலையம் உள்பட ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் தீவிரம் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு


பெரியார் பஸ் நிலையம் உள்பட ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் தீவிரம்   மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
x
தினத்தந்தி 26 May 2020 9:11 AM IST (Updated: 26 May 2020 9:11 AM IST)
t-max-icont-min-icon

பெரியார் பஸ் நிலையம் உள்பட ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் மீண்டும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாநகராட்சி கமிஷனர் விசாகன் நேற்று ஆய்வு செய்தார்.

மதுரை, 

மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரியார் பஸ் நிலையத்தில் ரூ.159 கோடி செலவில் கட்டுமான பணி நடந்து வருகிறது. இதேபோல் ரூ.2 கோடியே 65 லட்சம் செலவில் சுற்றுலா பயணிகள் கூடம் கட்டுமான பணி, ரூ.12 கோடி செலவில் பாரம்பரிய நடை பாதை அமைக்கும் பணி நடக்கிறது. இந்த பணிக்காக மதுரை மேற்கு நுழைவுவாயில் கோட்டைச்சுவர் முதல் நேதாஜி சாலை வழியாக மீனாட்சி அம்மன் கோவிலுக்கும், அம்மன் சன்னதியில் இருந்து தேர்முட்டி வழியாக விளக்குத்தூண் வரையிலும், அம்மன் சன்னதியில் இருந்து சொக்கநாதர் கோவில் வரையிலும், திண்டுக்கல் சாலை முதல் டவுண்ஹால் ரோடு தெப்பம் வரையிலும் என பாரம்பரிய நடைபாதை அமைக்கப்படுகிறது.

இது தவிர மீனாட்சி அம்மன் கோவில் நான்கு சித்திரை வீதிகளில் ரூ.15.24 கோடி மதிப்பீட்டில் கருங்கற்கள் பதிக்கும் பணி, குன்னத்தூர் சத்திரத்தில் ரூ.7 கோடியே 91 லட்சம் செலவில் கட்டுமான பணி, தெற்குமாசி வீதியில் பாதாள சாக்கடை மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, வைகை ஆற்று கரையில் ரூ.81.41 கோடி மதிப்பீட்டிலான மேம்பாட்டு பணி, தமுக்கம் மைதானத்தில் ரூ.47.72 கோடி மதிப்பீட்டில் கலாசார மையம் கட்டும் பணி ஆகியவை நடக்கிறது.

மேம்பாலம்

ஊரடங்கு காரணமாக இந்த பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் மீண்டும் இந்தப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் விசாகன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சியின் சார்பில் நடைபெறும் அனைத்து கட்டுமான பணிகளிலும் ஈடுபடும் பணியாளர்கள் முகக்கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும் என்றார். மேலும் வரும் போதும் பணிமுடிந்து செல்லும் போதும் கைகளை கழுவி செல்வதற்கு வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என்றார்.

இதைத்தொடர்ந்து கமிஷனர் விசாகன் நகர் மற்றும் ஊரக திட்டத் துறையின் அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் குருவிக்காரன் ஆற்றின் குறுக்கே செல்லும் தரைப்பாலத்தினை ரூ.23 கோடியே 17 லட்சம் செலவில் உயர்மட்ட பாலமாக மாற்றி அமைக்கும் பணியினை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது நகர் பொறியாளர் அரசு, உதவி கமிஷனர் சேகர், செயற்பொறியாளர்கள் முருகேசபாண்டியன், ராஜேந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், உதவி செயற்பொறியாளர் குழந்தைவேலு, முருகன், உதவி பொறியாளர்கள் மயிலேறிநாதன், தியாகராஜன், ஆறுமுகம், சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன் உள்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story