ஊரடங்கு நீட்டிப்பால் பள்ளிவாசல், மசூதிகள் மூடல்: வீட்டிலேயே சிறப்பு தொழுகை செய்து ரம்ஜானை கொண்டாடிய முஸ்லிம்கள்
ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக பள்ளிவாசல்கள், மசூதிகள் மூடப்பட்டதால் திருச்சியில் முஸ்லிம்கள் தங்கள் வீட்டிலேயே குடும்பத்துடன் சிறப்பு தொழுகை செய்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினார்கள்.
திருச்சி,
ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக பள்ளிவாசல்கள், மசூதிகள் மூடப்பட்டதால் திருச்சியில் முஸ்லிம்கள் தங்கள் வீட்டிலேயே குடும்பத்துடன் சிறப்பு தொழுகை செய்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினார்கள்.
ரம்ஜான் பண்டிகை
முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ரம்ஜான். திருச்சி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ரம்ஜான் அன்று முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து பள்ளி வாசல்கள் மற்றும் ஈத்கா மைதானத்தில் ஒன்றுகூடி சிறப்பு தொழுகை செய்வது வழக்கம். இந்த ஆண்டு நேற்று ரம்ஜான் பண்டிகை ஆகும். ரம்ஜானை சிறப்பாக கொண்டாட முடியாத வகையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது சிறப்பு தொழுகைக்கு தடை ஏற்படுத்தியது. இருப்பினும் கடந்த 30 நாட்களாக முஸ்லிம் மக்கள் ரமலான் நோன்பை கடைபிடித்து வந்தனர்.
பள்ளிவாசல்கள் மூடல்
பள்ளிவாசல்களுக்கு தடையை மீறி முஸ்லிம்கள் திரண்டு வந்துவிடாதபடி, பள்ளிவாசல்கள் மூடப்பட்டன. மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். இருப்பினும் முஸ்லிம்கள் பலர், பள்ளிவாசல்கள் முன்பு திரண்டனர். திருச்சி-மதுரை ரோட்டில் உள்ள நத்தர்ஷா பள்ளி வாசல் மூடப்பட்டிருந்தாலும், அதற்கு முன்பு முஸ்லிம்கள் சிலர் கூடி, வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். அங்கு இனிப்பு, உணவு உள்ளிட்டவைகளை வழங்கினர். திருச்சி பறவைகள் சாலையில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் திரண்டு சிறப்பு தொழுகை நடத்தக்கூடிய ஈத்கா மைதானம் வெறிச்சோடி கிடந்தது. அங்கு ஈத்கா மைதானத்தின் இரும்பு கேட்டுகள் மூடப்பட்டு, கண்டோன்மெண்ட் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
வீட்டில் இருந்தபடி தொழுகை
மேலும் முஸ்லிம்கள் தங்களது வீட்டில் இருந்தபடியே ரம்ஜான் சிறப்பு தொழுகையை மேற்கொண்டனர். சிலர் வீட்டின் மொட்டை மாடியில் தொழுகை மேற்கொண்டனர். முஸ்லிம் சிறுவர், சிறுமிகள் அன்புடன் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.
மேலும் வாட்ஸ் அப், முகநூல், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாகவும் ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். ஏழைகளுக்கு சமூக விலகலை கடைபிடித்து அன்னதானம் மற்றும் தான தர்மங்கள் வழங்கப்பட்டன.
இதுபோல் மணப்பாறை, லால்குடி, துறையூர், துவாக்குடி, முசிறி, நெ.1டோல்கேட், கூத்தூர், தாளக்குடி, மேலவாளாடி உள்ளிட்ட பகுதிகளிலும் முஸ்லிம் கள் எளிய முறையில் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினர்.
தானம்
இதுகுறித்து திருச்சி மாவட்ட அரசு ஹாஜி ஜலீல்சுல்தான் கூறுகையில், ‘கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக பள்ளிவாசல்களுக்கு சென்று தொழுகையில் ஈடுபட தடைவிதிக்கப்பட்டிருந்தது. எனவே, முஸ்லிம் சமுதாயத்தினரை தங்களது வீடுகளிலேயே தொழுகை நடத்தி தானம், தர்மம் வழங்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று முஸ்லிம்கள் எளிமையாக வீட்டில் இருந்தபடியே தொழுகை நடத்தினார்கள்.
திருச்சி மாநகரில் 130 பள்ளிவாசல் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் எவ்வித தொழுகையும் நடத்தப்படவில்லை. வீட்டில் இருந்தே குடும்பத்துடன் பிரார்த்தனை முடித்து ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் மற்றும் அன்பளிப்பு வழங்கப்பட்டது’ என்றார்.
Related Tags :
Next Story