கொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி: திருச்சி-சென்னை இடையே விமான சேவை திடீர் ரத்து பயணிகள் ஏமாற்றம்
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் எதிரொலியாக திருச்சி-சென்னை இடையேயான விமான சேவை நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டது.
செம்பட்டு,
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் எதிரொலியாக திருச்சி-சென்னை இடையேயான விமான சேவை நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டது.
விமான சேவை ரத்து
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் முதல் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. அதே நேரம் வெளிநாடுகளில் சிக்கித்தவித்த இந்தியர்களை அழைத்து வருவதற்காக சிறப்பு விமானங்கள் மட்டும் மத்திய அரசின் உத்தரவின் பேரில் இயக்கப்பட்டன.
அதன்படி திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கு மட்டும் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன. அவற்றில் இந்தியாவில் இருந்து காய்கறி, பழங்கள் ஏற்றிச்செல்லப்பட்டன. தற்போது சிறப்பு சரக்கு விமான சேவை மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசு அனுமதி
நேற்று முதல் உள்நாட்டு விமான சேவைகளை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன் அடிப்படையில் திருச்சியில் இருந்து சென்னைக்கு 2 விமானங்களும், பெங்களூருக்கு ஒரு விமானமும் இயக்கப்படும் என்று இன்டிகோ விமான நிறுவனம் தொிவித்தது.
இதைத்தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் விமான சேவை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை விமான நிலைய அதிகாரிகள் செய்து வந்தனர். அதன்படி, திருச்சியில் இருந்து நேற்று காலை 10.45 மணிக்கு சென்னை புறப்பட வேண்டிய விமானத்தில் 30 பேரும், இரவு 9.20 மணிக்கு புறப்பட வேண்டிய விமானத்தில் 30 பயணிகளும் முன்பதிவு செய்து இருந்தனர்.
அனுமதி மறுப்பு
இந்தநிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், திருச்சி-சென்னை இடையே விமான சேவைக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் திருச்சி-சென்னை இடையே விமான சேவை ரத்து செய்யப்படுவதாக நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணிக்கு விமான நிறுவனம் அறிவித்தது.
விமானம் ரத்து செய்யப்பட்டது தெரியாமல் பயணிகள் நேற்று காலை திருச்சி விமான நிலையத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். முன்பதிவு செய்திருந்த பயணிகள் அனைவருக்கும் பயண டிக்கெட்டுகள் இன்றைய (செவ்வாய்க்கிழமை) தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story