டெல்லி, சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரத்துக்கு மதுரையில் இருந்து விமானங்கள் இயக்கம் ஒரு விமானம் ரத்து; பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை
மதுரையில் இருந்து சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம், டெல்லிக்கு நேற்று முதல் விமான சேவை தொடங்கப்பட்டது.
மதுரை,
மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை உள்ளிட்ட உள்நாட்டு நகரங்களுக்கும், துபாய், இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டன. இதன் மூலம் பயணிகளுக்கான 25 விமானங்கள், 4 சரக்கு விமானங்கள் சேவை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு போடப்பட்டது. இதனால் மதுரை விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் 49 நாட்களுக்கு பிறகு அதாவது கடந்த 12-ந் தேதி மதுரையில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு சரக்கு விமான சேவை தொடங்கியது.
இதற்கிடையே 25-ந் தேதி முதல் இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி மதுரையில் இருந்து உள்நாட்டு நகரங்களுக்கு விமான சேவை தொடங்குவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றன.
குறிப்பிட்ட சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் இருக்கைகள் அமைப்பது, பயணிகளை பாதுகாப்பாக விமான நிலையங்களுக்கு அழைத்து வருவது, பயணிகளுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர செய்வது உள்ளிட்டவை குறித்து பல்வேறு கட்டங் களாக ஆலோசிக்கப்பட்டது.
விமான சேவை தொடக்கம்
அதன்படி அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்பட்டு 61 நாட்களுக்கு பிறகு மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னை, பெங்களூரு, டெல்லி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கு நேற்று முதல் 10 விமான சேவைகள் தொடங்கின.
தனியார் விமானம் நேற்று காலை 8.30 மணிக்கு சென்னையிலிருந்து மதுரை வந்து மீண்டும் 9 மணிக்கு சென்னை சென்றது. மற்றொரு விமானம் பெங்களூருவில் இருந்து புறப்பட்டு 12.25 மணிக்கு மதுரை வந்து, 1 மணிக்கு மீண்டும் பெங்களூரு சென்றது.
இதற்கிடையே காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து மதுரை வந்தடைந்த விமானம், மீண்டும் 12 மணிக்கு சென்னை சென்றது.
இது தவிர ஏர் இந்தியா விமானம் மதியம் 1.30 மணிக்கு டெல்லியில் இருந்து மதுரை வந்தடைந்து, மீண்டும் 2.45 மணிக்கு மதுரையில் இருந்து திருவனந்தபுரம் சென்றது.
மீண்டும் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு 5.50 மணிக்கு மதுரை வந்தடைந்தது. பின்னர் 6.40 மணிக்கு டெல்லி சென்றது. காலையில் 7 மணிக்கு சென்னையில் இருந்து மதுரை வரவேண்டிய ஒரு விமானம் பயணிகள் இல்லாததால் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
கிருமி நாசினி
முன்னதாக மதுரை விமான நிலையம் வந்த பயணிகள் மற்றும் அவர்கள் கொண்டு வந்த பொருட்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் பயணிகள் கை கழுவுவதற்கு வசதியாக விமான நிலைய வளாகத்தில் தானியங்கி எந்திரம் வைக்கப்பட்டுள்ளது. மேலும் காலணிகள் மூலம் கிருமி பரவுவதற்கான வாய்ப்பு உள்ளதால் கிருமிநாசினி தெளிக்கப்பட்ட தரை விரிப்பில் காலணிகள் சுத்தம் செய்து பயணிகள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. இது போல் அனைத்து பயணிகளுக்கும் கையுறைகள் வழங்கப்பட்ட பின்பு மதுரை விமான நிலையத்தினுள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கவச உடைகளை அணிந்து வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா பரிசோதனை
நேற்று இயக்கப்பட்ட விமானங்களில் மதுரை வந்த அனைவருக்கும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் யாருக்கும் நோய் தொற்று இல்லை எனவும், நோய் தொற்று இருக்கும் பட்சத்தில் அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், கொரோனா தொற்று இல்லாதவர்களுக்கு, அவர்களது கையில் ‘சீல்’ வைத்து 14 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சுகாதார துறையினர் தெரிவித்தனர்.
மதுரை விமான நிலையம் உள்ளே உள்ள மருந்தகங்கள், உணவகங்கள் தவிர்த்து வேறு எந்த கடையும் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. தற்போது உள்ள விமான சேவை 30-ந் தேதி வரை தொடரும் என்றும், மே 31-ந் தேதிக்கு பிறகு பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து விமானங்கள் அதிக அளவில் இயக்கப்படுவது குறித்து அறிவிக்கப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story