கடலூரில் சுட்டெரிக்கும் வெயில்: பனை ஓலை விசிறிகள் விற்பனை அமோகம்


கடலூரில் சுட்டெரிக்கும் வெயில்: பனை ஓலை விசிறிகள் விற்பனை அமோகம்
x
தினத்தந்தி 26 May 2020 10:48 AM IST (Updated: 26 May 2020 10:48 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் அக்னி வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பனை ஓலை விசிறிகள் அமோகமாக விற்பனையாகிறது.

கடலூர்,

காகிதங்கள் தோன்றாத காலத்தில் மூதாதையர்கள் ஏடுகளின் மூலமே தங்களின் அறிவுத்திறனை வளர்த்துக் கொண்டனர். இதனால் ஏடுகளே அறிவின் சின்னமாக கருதப்பட்டு வருகிறது. இந்த ஏடுகள் தயாரிக்கப்பட்டது பனை ஓலைகளில் இருந்துதான். இன்னும் சொல்லப்போனால் கூந்தப்பனை மற்றும் தாழிப்பனை மரம் போன்றவற்றின் ஓலைகளில் தான் ஏடுகள் தயாரிக்கப்பட்டன.

தற்போது தங்கத்தில் தாலி செய்து அணிவது போல, முன்பு பழந்தமிழர்கள் பனை ஓலையில் மணமகன் பெயரையும், மணமகள் பெயரையும் எழுதி சுருட்டி மணமகளின் காதில் அணிவித்து விடுவார்களாம். அந்த காலத்தில் அதுதான் தாலியாக கருதப்பட்டு வந்தது. இவ்வாறு அன்று முதல் இன்று வரை பனை ஓலை மனிதர்களின் வாழ்வில் கலந்து இருந்து வருகிறது.

மனிதர்களின் பயன்பாட்டில் மிக முக்கிய பொருளாக கருதப்பட்ட பனை ஓலை பொருட்கள், பிளாஸ்டிக்கின் வரவால் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது. மேலும் விவசாய நிலங்கள் எல்லாம் விலை நிலங்களாக மாறிவிட்டதாலும், பனை மரங்கள் செங்கல் சூளைகளுக்கும், இன்னும் பிற காரணங்களுக்காகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பனை மரங்கள் 70 சதவீதம் அளவிற்கு அழிந்து விட்டன. பலுகி பெருகி ஓங்கி வளர்ந்திருந்த பனை மரங்கள் இன்று அரிதாக அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்படுகின்றன.

நாகரிக வளர்ச்சியால் ஈர்க்கப்பட்டு சென்ற மக்கள் தற்போது மீண்டும் பண்டைய நாகரிக பயன்பாட்டிற்கு வரத்தொடங்கி உள்ளனர். இதன்காரணமாக பிளாஸ்டிக் பயன்பாட்டில் இருந்து விலகி வர முயன்று, தற்போது மீண்டும் பனை ஓலை பொருட்கள் மற்றும் அதன் நன்மையின் மேல் அக்கறை கொண்டு அதனை நாடிச்சென்று வருகின்றனர். இதன்காரணமாக தற்போது பனை ஓலையால் செய்யப்படும் பொருட்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

இதுதவிர, என்னதான் மின்சாரக்காற்று இருந்தாலும் அது வெப்பக்காற்றாக இருப்பதால் பனை ஓலையால் செய்யப்பட்ட விசிறிகளை பொதுமக்கள் தற்போது அதிகஅளவில் வாங்கி வருகின்றனர். இதனால் இந்த விசிறிகளுக்கும் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் இயற்கையிலேயே பனை மரங்கள் அதிகம் உள்ள பகுதியாக இருப்பதால் இங்கு மிஞ்சியுள்ள பனை மரங்களில் இருந்து பனை ஓலைகள் வெட்டி கொண்டுவரப்பட்டு, அதன் மூலம் விசிறிகள் செய்யப்படுகின்றன.

பின்னர் அவை ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது கடலூரில் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருப்பதால் புழுக்கத்தில் தவிக்கும் மக்கள் பனை ஓலையால் செய்யப்பட்ட விசிறிகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் பனை ஓலை விசிறிகள் அமோகமாக விற்பனையாகிறது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், சுட்டெரிக்கும் வெயில் காரணத்தாலும், பனை ஓலை பொருட்கள் மீது மக்களுக்கு நாட்டம் அதிகரித்து உள்ளதாலும் பனை ஓலை விசிறிகள் விற்பனை அதிகரித்து வருகிறது. ஆனால், விசிறிகள் செய்வதற்கு தேவையான பனை ஓலைகள் கிடைப்பதில்லை. இதுதவிர, ஒரு பனை மரத்தில் ஏறி ஓலைகளை வெட்டி தருவதற்கான கூலியும் அதிகரித்து விட்டது. இருந்தாலும், எங்களின் தொழிலை கைவிட்டுவிடக்கூடாது என்பதற்காக பனை ஓலைகளை வெட்டி வந்து, விசிறிகள் செய்து பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்கிறோம் என்றனர்.

Next Story