கொரோனா ஊரடங்கால் ரம்ஜான் பண்டிகை களையிழந்தது வீடுகளில் முஸ்லிம்கள் தொழுகை


கொரோனா ஊரடங்கால் ரம்ஜான் பண்டிகை களையிழந்தது வீடுகளில் முஸ்லிம்கள் தொழுகை
x
தினத்தந்தி 26 May 2020 11:02 AM IST (Updated: 26 May 2020 11:02 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஊரடங்கால் ரம்ஜான் பண்டிகை களையிழந்தது. வீடுகளில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தினர்.

புதுக்கோட்டை, 

கொரோனா ஊரடங்கால் ரம்ஜான் பண்டிகை களையிழந்தது. வீடுகளில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தினர்.

ரம்ஜான் பண்டிகை

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்ட போதிலும் மத வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. வழக்கமாக ரம்ஜான் பண்டிகையின் போது பள்ளிவாசல்கள் மற்றும் பொதுவான ஒரு இடங்களில் கூட்டுத்தொழுகை நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் கொரோனா வைரசின் பரவல் காரணமாக பொது இடங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் கூட்டமாக தொழுகை நடத்த வேண்டாம் என அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தன.

புதுக்கோட்டையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி வழக்கமாக சிறப்பு தொழுகைகள் நடைபெறும் தெற்கு 2-ம் வீதியில் உள்ள பள்ளிவாசல் மற்றும் ஆயுதப்படை மைதானம் அருகே உள்ள அரபிக்கல்லூரி பூட்டப்பட்டிருந்தன. முஸ்லிம்கள் சிலர் பள்ளி வாசல் முன்பு நின்று இறைவனை வணங்கி விட்டு ஏழைகளுக்கு தர்மம் செய்தனர்.

வீட்டில் தொழுகை

ஊரடங்கின் காரணமாக ரம்ஜான் பண்டிகை களையிழந்தது. முஸ்லிம்கள் பலர் புத்தாடை எடுக்காமல் எளிமையாக கொண்டாடினர். மேலும் முஸ்லிம்கள் தங்களது வீடுகளிலேயே தொழுகை நடத்தினர். குடும்ப உறுப்பினர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி இறைவனை வேண்டி தொழுகையில் ஈடுபட்டனர். ஒருவருக்கொருவர் பண்டிகை வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். மேலும் செல்போன் மூலமாகவும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். வீடுகளில் பிரியாணி சமைத்து உண்டனர். மேலும் தங்களது நண்பர்கள், உறவினர்களுக்கு கொடுத்து மகிழ்ந்தனர்.

அன்னவாசல்

இதேபோல் அன்னவாசல், இலுப்பூர், முக்கண்ணாமலைப்பட்டி, மாங்குடி, பெருமநாடு, புல்வயல், வயலோகம், நார்த்தாமலை, விளத்துப்பட்டி, பரம்பூர், குடுமியான்மலை, காலாடிப்பட்டி, தென்னலூர் உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம்கள் வீட்டிலேயே சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் சிறுவர்கள் புத்தாடை அணிந்து வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

அரிமளம்

ஊரடங்கு காரணமாக அரிமளத்தில் வசித்து வரும் முஸ்லிம்கள் இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகையை எளிமையாக கொண்டாடினர். இது தொடர்பாக அரிமளத்தை சேர்ந்த முகம்மது இப்ராகிம் கூறுகையில், அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினோம். பள்ளிவாசல்கள் திறக்கப்படவில்லை. அவரவர் வீடுகளில் தொழுகை நடத்தினோம். எனக்கு விவரம் தெரிந்த காலத்தில் இருந்து இப்படி வீட்டில் தொழுகை நடத்தி ரம்ஜான் கொண்டாடியது இல்லை. என்னதான் கஷ்டமாக இருந்தாலும் பள்ளிவாசல் சென்று தொழுகை நடத்தினால் மனதிற்கு சந்தோஷமாக இருக்கும் என்றார்.

கீரனூர்

கீரனூரில் முஸ்லிம்கள் ஈத் மைதானத்தில் சிறப்பு தொழுகை நடத்தி அதன்பின் ஊர்வலமாக ஜூம்மா பள்ளிவாசலில் வந்து தொழுகையில் பங்கேற்பது வழக்கம். மேலும் ஏழை, எளிய மக்களுக்கு உணவுகள், புத்தாடைகள் கொடுப்பார்கள். ஆனால் ஊரடங்கின் காரணமாக இவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு தொழுகை மைதானம், பள்ளிவாசல் வெறிச்சோடி காணப்பட்டன. வீட்டில் இருந்தே தொழுகையில் ஈடுபட்டனர்.

கந்தர்வகோட்டை

ரம்ஜான் பண்டிகையையொட்டி கந்தர்வகோட்டை பகுதி முஸ்லிம்கள் தங்கள் வீடுகளில் தொழுகை நடத்தினர். பின்னர் ஒருவருக் கொருவர் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

இதேபோல் ஆலங்குடியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மாவட்ட பொதுச்செயலாளரும் செரியாலூர் இனாம் ஊராட்சி மன்றத்தலைவருமான எம்.எஸ். முகமது ஜீயாவுதீன் தலைமையில் கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு பிரியாணி பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

Next Story