தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து நாயை கடித்துக்கொன்ற சிறுத்தை


தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து நாயை கடித்துக்கொன்ற சிறுத்தை
x
தினத்தந்தி 26 May 2020 6:06 AM GMT (Updated: 26 May 2020 6:06 AM GMT)

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்த சிறுத்தை நாயை கடித்துக்கொன்றது. அந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர்.

தாளவாடி,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு ஏராளமான மான், புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் சிறுத்தை மற்றும் புலி ஆகிய விலங்குகள் வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வெளியேறி வருகின்றன.

வனப்பகுதி அருகே உள்ள தோட்டத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. அங்கு கட்டப்பட்டிருக்கும் கால்நடைகளை வேட்டையாடுகின்றது, சில நேரம் தோட்டத்தில் வேட்டைக்காக கட்டப்பட்டிருக்கும் நாயையும் விட்டு வைப்பதில்லை. இந்த நிலையில் தாளவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட மல்குத்திபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். விவசாயி. இவரது வீடு அருகே தோட்டம் உள்ளது. இங்கு அவர் காவலுக்காக நாயை விட்டிருந்தார்.

நேற்று முன்தினம் காலை ஆறுமுகம் வீட்டில் இருந்தார். அப்போது நாய் கத்தும் சத்தம் கேட்டது. உடனே வெளியே ஓடிவந்து பார்த்தார். அங்கு சிறுத்தை நாயை கடித்துக்கொண்டிருந்தது. இதனால் ஆறுமுகம் சத்தம் போடவே சிறுத்தை, தோட்டத்தில் இருந்து ஓடி கரும்பு தோட்டத்துக்கு சென்று பதுங்கி கொண்டது. அதன்பின்னர் நாயின் அருகே சென்று பார்த்தார். நாயிக்கு காயம் ஏற்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தோட்டத்தில் பதுங்கியிருந்த சிறுத்தை இரவு நேரத்தில் மீண்டும் வெளியேறி, அந்த பகுதியை சேர்ந்த குமார் என்பவரது வீடு முன்பு கட்டப்பட்டிருந்த கன்றுக்குட்டியை கடித்து காயப்படுத்தியது. சத்தம் கேட்டு குமார் வெளியே ஓடி வந்தார். அதற்குள் சிறுத்தை அங்கிருந்து சென்றுவிட்டது.

அதைத்தொடர்ந்து ரங்கசாமி என்பவரது தோட்டத்துக்குள் சிறுத்தை புகுந்தது. அங்கு காவலுக்காக விடப்பட்ட நாயை கடித்துக்கொன்றுவிட்டு சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இந்த நிலையில் நேற்று காலை தோட்டத்துக்கு வந்து பார்த்த ரங்கசாமி அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுபற்றி தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் வனத்துறையினர் அங்கு சென்று சிறுத்தையின் கால்தடத்தை ஆய்வு செய்தனர்.

இதைத்தொடர்ந்து சிறுத்தை நடமாட்டம் இருந்த ரங்கசாமியின் தோட்டத்து பகுதியில் கூண்டு வைத்தனர். கூண்டில் இறந்த நாயின் உடலையும் போட்டுள்ளனர். மேலும் வனத்துறையினர் தொடர்ந்து அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுத்தை நடமாட்டத்தால் அந்த பகுதி விவசாயிகள் பீதியடைந்துள்ளனர்.

Next Story