ஊரடங்கால் அருணாசலேஸ்வரர் கோவிலை நம்பி தொழில் செய்யும் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு - நிவாரண உதவி வழங்க கோரிக்கை
கொரோனா ஊரடங்கால் அருணாசலேஸ்வரர் கோவிலை நம்பி தொழில் செய்யும் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலுக்கு பின்புறம் உள்ள மலையைச் சுற்றி கிரிவலப் பாதையில் ரமணாஸ்ரமம் உள்பட பல்வேறு ஆசிரமங்கள் உள்ளன. கோவில் மற்றும் ஆசிரமங்களை காண உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான மக்கள், பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால் திருவண்ணாமலை ஆன்மிக நகரம் மட்டுமில்லாமல் சுற்றுலா தலமாகவும் உள்ளது.
கொரோனா வைரஸ் பரவலால் தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுபாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு கடந்த மார்ச் மாதம் இறுதியில் தடை விதித்து மூடப்பட்டது. அதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலிலும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. கோவிலை சுற்றி கோவில் நிர்வாகத்துக்கு உட்பட்ட இடத்தில் 140 கடைகள் உள்ளன. வியாபாரிகள் இந்தக் கடைகளை வாடகைக்கு எடுத்து, தொழில் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் கொரோனா ஊரடங்கால் இந்தக் கடைகளை நடத்தி வரும் வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்து சிரமப்பட்டு வருகின்றனர். ஊரங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டதால், அவர்கள் கடைகளை திறந்தும் எந்தவித வியாபாரமும் நடக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து அருள்மிகு அண்ணாமலையார் ஆலய கடை கட்டிட வாடகைதாரர்கள் சங்கத் தலைவர் சம்பத்குமார் கூறியதாவது:-
அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகத்துக்கு உட்பட்ட 140 கடைகள் கோவிலை சுற்றி உள்ளன. அதில் பேன்சி ஸ்டோர், பாத்திரக்கடைகள், சாமி படக்கடைகள், பூஜை பொருட்கள் விற்பனை கடைகள், டீக்கடைகள் போன்றவை அடங்கும். இந்தக் கடைகளை நம்பி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் என 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
கொரோனா வைரஸ் பரவலால் அருணாசலேஸ்வரர் கோவில் கடந்த மார்ச் மாதம் 20-ந்தேதி மூடப்பட்டது. அதற்கு ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே கொரோனா வைரஸ் பரவலால் மக்கள் நடமாட்டம் குறைந்து வியாபாரம் பாதிக்கத் தொடங்கியது. பின்னர் கோவில் மூடப்பட்டு பக்தர்கள் வருகை இல்லாததால் எங்களுக்கு வியாபாரம் நடக்கவில்லை.
இந்தக் கடைகள் அனைத்தும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை நம்பியே உள்ளன. கொரோனா ஊரடங்கு உத்தரவால் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. சமீபத்தில் ஊரடங்கில் சில தளர்வு செய்யப்பட்டு உள்ளதால் வியாபாரிகள் சுமார் 50 நாட்களுக்கு பிறகு மீண்டும் கடைகளை திறந்து வைத்துள்ளனர்.
கோவிலுக்கு பக்தர்கள் வருகை இல்லாததால் ஒரு நாளைக்கு ரூ.100-க்கு கூட வியாபாரம் நடக்கவில்லை. காலையில் இருந்து இரவு 7 மணி வரை கடைகளை திறக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. ஆனால் போலீசார் மாலை 6 மணிக்கே வந்து கடைகளை மூட வேண்டும் என உத்தரவிடுகின்றனர். கிடைக்கும் ரூ.5 அல்லது ரூ.10-ம் கிடைக்க விடமால் போலீசார் தடுக்கின்றனர். ஊரடங்கால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.
எனவே வியாபாரிகளின் நிலையை கருத்தில் கொண்டு கோவில் நிர்வாகம் 2020-ம் ஆண்டு முழுவதும் எங்களிடம் கடை வாடகையை வசூலிக்கக்கூடாது. 30 யூனிட்டுக்கு குறைவாக மின் பதிவு செய்யப்பட்டுள்ள கடைகளில் ஊரடங்கு காலத்துக்கான மின் கட்டணம் வசூலிக்கக்கூடாது. சிறு தொழில் செய்யும் வியாபாரிகளுக்கு வழங்கப்படும் நிவாரண நிதி உதவி எங்களுக்கும் வழங்க வேண்டும். எங்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story