ஊரடங்கால் ஆட்டோ தொழில் பாதிப்பு: 3 மாத கடன் தவணையை ரத்து செய்ய வேண்டும் சப்-கலெக்டரிடம், டிரைவர்கள் கோரிக்கை


ஊரடங்கால் ஆட்டோ தொழில் பாதிப்பு:  3 மாத கடன் தவணையை ரத்து செய்ய வேண்டும்  சப்-கலெக்டரிடம், டிரைவர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 27 May 2020 3:03 AM IST (Updated: 27 May 2020 3:03 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கால் ஆட்டோ தொழில் பாதிக்கப்பட்டு உள்ளதால், 3 மாத கடன் தவணையை ரத்து செய்ய வேண்டும் என்று சப்-கலெக்டர் வைத்திநாதனிடம், ஆட்டோ டிரைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பொள்ளாச்சி,


பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று சப்-கலெக்டர் வைத்திநாதனிடம் கோட்டூர் மலையாண்டிபட்டிணம் நண்பர்கள் ஆட்டோ ஓட்டுனர் பொதுநல அறக்கட்டளையினர் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நாங்கள் வாடகைக்கு ஆட்டோ ஓட்டி குடும்பத்தை நடத்தி வருகிறோம். கடந்த 3 மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் ஆட்டோக்கள் ஓடவில்லை. இதனால் தொழில் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து உள்ளோம். இதற்கிடையில் ஆட்டோக்கள் வாங்குவதற்கு தனியார் நிதி நிறுவனங்களிடம் கடன் உதவி பெற்று உள்ளோம். ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் கடன் பெற்று, அதற்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வட்டி செலுத்தி வருகிறோம். கடந்த 3 மாதமாக ஆட்டோக்கள் ஓடாததால் கடனை செலுத்த முடியவில்லை. ஒரு மாத தவணை தொகையான ரூ.8,300 என 3 மாதங்களுக்கு சேர்த்து ரூ.24,900-யை உடனடியாக செலுத்த வேண்டும். மேலும் அதற்கு வட்டி தொகை ரூ.5 ஆயிரம் சேர்த்து செலுத்த வேண்டும் என்கின்றனர்.

ரத்து செய்ய வேண்டும்

அரசு ஆணைப்படி 3 மாதம் கழித்து செலுத்தலாம். இதற்கிடையில் கடைசியில் 48 மாத தவணை கட்டும் போது இந்த 3 மாத தவணை தொகையுடன் வட்டி மட்டும் ரூ.30 ஆயிரம் செலுத்தினால்தான் என்.ஓ.சி. தருவேன் என்கிறார்கள். ஆட்டோக்கள் ஓடினால் தான் குடும்ப செலவு, வீட்டு வாடகை, ஆட்டோ தவணை தொகை மற்றும் குழந்தைகளுக்கான செலவு ஆகியவற்றை செய்ய முடியும். தற்போது இருக்கும் சூழ்நிலையில் ஆட்டோ டிரைவர்களால் எந்த தவணை தொகையும் செலுத்த இயலாத நிலையில் உள்ளோம்.

பஸ்கள் ஓடினால் தான் ஆட்டோவும் இயங்கும். எனவே 3 மாத கடன் தவணை தொகையை அரசு ரத்து செய்ய வேண்டும். அல்லது வட்டி தொகை ரூ.30 ஆயிரத்தை ரத்து செய்ய வேண்டும். இதற்கு அனைத்து ஆட்டோ நிதி நிறுவனங்களும் உதவி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story