பொள்ளாச்சி வட்டாரத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி மும்முரம்


பொள்ளாச்சி வட்டாரத்தில்  கிருமி நாசினி தெளிக்கும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 27 May 2020 3:16 AM IST (Updated: 27 May 2020 3:16 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி வட்டாரத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பொள்ளாச்சி,

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் ஊரக வளர்ச்சி துறை மூலம் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. தற்போது பொள்ளாச்சி, ஆனைமலை, நெகமம் பகுதிகளில் கொரோனா தொற்று இல்லை.

இருப்பினும் தீயணைப்பு துறை வாகனம் மூலம் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொண்டு தீயணைப்பு வீரர்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணியை பொள்ளாச்சி தீயணைப்பு நிலைய அதிகாரி புருஷோத்தமன் ஆய்வு செய்தார். இதுகுறித்து தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கிருமி நாசினி தெளிப்பு

கடந்த 4-ந் தேதி முதல் பொள்ளாச்சி நகரம் மட்டுமல்லாது கிராமங்களிலும் தீயணைப்பு துறை வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இன்று (நேற்று) பொள்ளாச்சி பஸ் நிலையம், ஜமீன்முத்தூர், போடிபாளையம், மண்ணூர், ராமபட்டிணம் உள்ளிட்ட கிராமங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இதேபோன்று தினமும் கிராம பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் காலை 6 மணி முதல் 10 மணி வரை கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

Next Story