இலவச மின்சாரத்தை ரத்து செய்தால் உணவுக்காக அமெரிக்காவிடம், இந்தியா மீண்டும் கையேந்தும் நிலை உருவாகும் கே.எஸ்.அழகிரி பேட்டி


இலவச மின்சாரத்தை ரத்து செய்தால் உணவுக்காக அமெரிக்காவிடம், இந்தியா மீண்டும் கையேந்தும் நிலை உருவாகும் கே.எஸ்.அழகிரி பேட்டி
x
தினத்தந்தி 27 May 2020 4:10 AM IST (Updated: 27 May 2020 4:10 AM IST)
t-max-icont-min-icon

இலவச மின்சாரத்தை ரத்து செய்தால் உணவுக்காக அமெரிக்காவிடம், இந்தியா மீண்டும் கையேந்தும் நிலை உருவாகும் என்று கும்பகோணத்தில் கே.எஸ்.அழகிரி கூறினார்.

கும்பகோணம், 

இலவச மின்சாரத்தை ரத்து செய்தால் உணவுக்காக அமெரிக்காவிடம், இந்தியா மீண்டும் கையேந்தும் நிலை உருவாகும் என்று கும்பகோணத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

ஆர்ப்பாட்டம்

இலவச மின்சாரத்தை பறிக்கும் திட்டத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காந்தி பூங்காவில் தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமை தாங்கினார். விவசாய பிரிவு மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் நகர தலைவர் மிர்சாவூதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு பேசினார். இதில் விவசாய பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், மாவட்ட பொது செயலாளர் அய்யப்பன் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

ஏற்க முடியாது

பின்னர் கே.எஸ் அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கி வரும் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதை யாரும் ஏற்க முடியாது. இது தவறான செயல். சாகுபடி செய்ய இலவச மின்சாரம் வழங்கினால் தான் தேவையான உணவு உற்பத்தி கிடைக்கும். 1960-ம் ஆண்டு உணவு பஞ்சம் ஏற்பட்டது. அமெரிக்காவில் இருந்து கோதுமை இறக்குமதி செய்யப்பட்டது. அதன்பிறகுதான் பசுமை புரட்சி ஏற்பட்டு உணவு உற்பத்தி அதிகமானது.

இந்த செயலுக்கு பெருமைக்குரியவர்கள் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, தமிழகத்தை சேர்ந்த சி.சுப்பிரமணியன், விவசாய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆவர். இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்க வேண்டுமென தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்தது. இந்த போராட்டங்களில் துப்பாக்கி சூடு நடந்தது. அதன் பிறகு அப்போதைய முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி, இலவச மின்சாரத்தை வழங்கினார்.

மீண்டும் கையேந்தும் நிலை ஏற்படும்

மத்திய அரசு, இலவச மின்சாரத்தை பறிப்பது தவறானதாகும், இந்தியாவிற்கு குந்தகம் விளைவிப்பதாகும். அப்படி செய்தால் மீண்டும் உணவு பஞ்சம் ஏற்படும். இலவச மின்சாரத்தை ரத்து செய்தால், விவசாயிகளின் உற்பத்தி குறையும். இதனால் உணவுக்காக மீண்டும் அமெரிக்காவிடம் கையேந்த வேண்டிய நிலை உருவாகும். மத்திய அரசின் இந்த செயல், இந்தியாவின் நன்மைக்கு குந்தகம் விளைவிப்பதாகும்.

தமிழக முதல்-அமைச்சர், இலவச மின்சாரத்தை ரத்து செய்வதை எதிர்க்கின்றேன் என்கிறார். இதனை நான் வரவேற்கிறேன். ஆனால் அவர் எங்களைப்போல வெளியில் வந்து சொல்ல வேண்டும். தமிழக அரசிடம், எதையும் தடுத்து நிறுத்தக்கூடிய சக்தி இல்லை. தமிழக அரசு, மத்திய அரசுக்கு வேண்டிய அரசாகும். அ.தி.மு.க. அரசு சொல்வதை நாங்கள் நம்புவதாக இல்லை.

சிறை செல்லும் போராட்டம்

தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் நான் எச்சரிக்கை செய்கிறேன். விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்தால், தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் சிறை செல்லும் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அழகிரி உள்பட 40 பேர் மீது வழக்கு

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில் கும்பகோணத்தில் தடை உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் செய்த மாநில தலைவர் கேஎஸ்.அழகிரி, மாவட்ட தலைவர் லோகநாதன் மற்றும் 10 பெண்கள் உள்பட 40 பேர் மீது கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

Next Story