புதிய மின்சார சட்டத்தை கண்டித்து தஞ்சையில், காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


புதிய மின்சார சட்டத்தை கண்டித்து தஞ்சையில், காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 May 2020 10:50 PM GMT (Updated: 26 May 2020 10:50 PM GMT)

புதிய மின்சார சட்டத்தை கண்டித்து தஞ்சையில், காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர், 

புதிய மின்சார சட்டத்தை கண்டித்து தஞ்சையில், காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டு வரவுள்ள புதிய மின்சார சட்டத்தால் தமிழக விவசாயிகள் பெற்று வரும் இலவச மின்சார திட்டத்திற்கு ஆபத்து உருவாக உள்ளதாக கூறி மத்திய அரசை கண்டித்து தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தஞ்சை மாநகரிலும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் அன்பரசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கண்டிதம்பட்டு கோவிந்தராஜ், ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட பொது செயலாளர் மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு மாநகர் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையிலும், தஞ்சை கீழவாசலில் முன்னாள் மாவட்ட தலைவர் நாஞ்சி.வரதராஜன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருக்காட்டுப்பள்ளி

பூதலூர் ஒன்றிய அலுவலகம் முன்பு வட்டார காங்கிரஸ் தலைவர் அறிவழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேபோல் திருக்காட்டுப்பள்ளி, செங்கிப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள தபால் நிலையங்கள் முன்பும், தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் எதிரிலும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Next Story