நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் முன்பு தரையில் நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டம்


நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் முன்பு தரையில் நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 27 May 2020 4:55 AM IST (Updated: 27 May 2020 4:55 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகம் முன்பு தரையில் நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர், 

தஞ்சை நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகம் முன்பு தரையில் நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் போராட்டம்

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்க மாநில துணைத்தலைவர் கக்கரை சுகுமாறன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று தஞ்சை ராமநாதன் ரவுண்டானா அருகே உள்ள நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் தரையில் நெல்லை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும். மூட்டைக்கு 1 கிலோ நெல் பிடித்தம் செய்வதையும், மூட்டைக்கு ரூ.30 பணம் பிடித்தம் செய்வதையும் கைவிட வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். இதில் நிர்வாகிகள் ராமநாதன், செல்வராஜ், ஜெயக்குமார் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

திறக்க வேண்டும்

இது குறித்து சுகுமாறன் கூறுகையில், “ஒக்கநாடு மேலையூரில் நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இந்த கொள்முதல் நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வருபவர் மூட்டைக்கு ரூ.45 தர வேண்டும் என கூறி விவசாயியிடம் தகராறு செய்துள்ளார். இது தொடர்பாக போலீசில் புகார் செய்து ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள 40 கொள்முதல் நிலையங்களிலும் நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகள் கோடை நெல்லை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள். சிலர் தனியாரிடம் அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்கிறார்கள். எனவே உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும்” என்றார்.

Next Story