கோவில்களை திறக்க வலியுறுத்தி தோப்புக்கரணம் போட்டு இந்து முன்னணியினர் போராட்டம்


கோவில்களை திறக்க வலியுறுத்தி  தோப்புக்கரணம் போட்டு இந்து முன்னணியினர் போராட்டம்
x
தினத்தந்தி 27 May 2020 4:59 AM IST (Updated: 27 May 2020 4:59 AM IST)
t-max-icont-min-icon

கோவில்களை திறக்க வலியுறுத்தி தோப்புக்கரணம் போட்டு இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊட்டி,

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் கூடாமல் இருக்கவும் கோவில்கள் மூடப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 17 கோவில்கள் உள்பட அனைத்து கோவில்களும் கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி முதல் அடைக்கப்பட்டு, சுவாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளது என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

ஊட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடைபெறும் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. கோவில் மூடப்பட்டு உள்ளதால், பக்தர்கள் வெளியே நின்றபடி சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இக்கோவிலில் தினமும் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. ஊரடங்கால் உணவு பார்சல் போடப்பட்டு, பசியால் வாடும் வடமாநில தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

போராட்டம்

இந்த நிலையில் நேற்று இந்து முன்னணி சார்பில் வழிபாட்டுக்காக கோவில்களை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி ஊட்டியில் கோவில்கள் முன்பு தோப்புக்கரணம் போட்டு போராட்டம் நடைபெற்றது. மாரியம்மன் கோவில் முன்பு நடந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள பாறை முனீஸ்வரர் கோவில் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு கோவை கோட்ட செயலாளர் மஞ்சுநாத் தலைமை தாங்கினார்.

போராட்டத்தில் தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க அனுமதி அளித்தது. அங்கு சமூக இடைவெளி இல்லாமல் கூட்டம் காணப்படுகிறது. கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்ட கோவில்களை வழிபாட்டுக்காக திறக்க அனுமதிக்க வேண்டும். பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற கட்டுபாடுகளுடன் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோ‌‌ஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன், நிர்வாகிகள் செந்தில், மோகன், சிவா கலந்துகொண்டனர்.

தோப்புக்கரணம் போட்டு...

அதேபோல் ஊட்டி பழைய அக்ரஹாரம் தெருவில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில், எல்க்ஹில் முருகன் கோவில் மற்றும் குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர், கூடலூர், பந்தலூர் பகுதிகளில் என 100-க்கும் மேற்பட்ட கோவில்கள் முன்பு சமூக இடைவெளியை கடைபிடித்து போராட்டம் நடந்தது.

கூடலூரில் சக்தி விநாயகர், மேல் கூடலூர் மாரியம்மன், செவிவிடிப்பேட்டை முனீ‌‌ஷ்வரன், நந்தட்டி சிவன், முருகன் கோவில்கள் முன்பு இந்து முன்னணியினர் தோப்புக்கரணம் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோன்று ஓவேலி, பந்தலூர் உள்பட நீலகிரி மாவட்டம் முழுவதும் இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story