கூடலூர், மசினகுடியில் பலத்த மழை: சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு


கூடலூர், மசினகுடியில் பலத்த மழை:  சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 27 May 2020 5:17 AM IST (Updated: 27 May 2020 5:17 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர், மசினகுடியில் பலத்த மழை காரணமாக சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கடந்த சில வாரங்களாக காலை முதல் மாலை வரை கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். ஆனால் இரவில் பரவலாக மழை பெய்து வருகிறது. இருப்பினும் பகலில் வெயில் அதிகமாக இருப்பதால், இரவில் வீடுகளுக்குள் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் மின் விசிறியை பயன்படுத்தி பொதுமக்கள் தூங்கும் நிலை காணப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் இருந்து மாலை வரை வெயில் காணப்பட்டது. பின்னர் வானம் மேக மூட்டத்துடன் மாறியது. மேலும் குளிர்ந்த காற்று வீசியது. இரவு 11½ மணிக்கு பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. இதேபோல் முதுமலை, மசினகுடி பகுதியிலும் பலத்த மழை பெய்தது. மேலும் பலத்த காற்று வீசியதால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தது.

போக்குவரத்து பாதிப்பு

மசினகுடியில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் நேற்று அதிகாலை 2 மணிக்கு மரம் முறிந்து விழுந்தது. தொடர்ந்து மசினகுடியில் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த வேன் மீது மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. இதில் வேனின் முன்பக்கம் பலத்த சேதம் அடைந்தது. இரவு நேரம் என்பதால் தனியார் கார்கள், வாகனங்கள் எதுவும் இயக்கப்படவில்லை. ஆனால் காலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த மசினகுடி போலீசார் விரைந்து வந்து பொதுமக்களின் உதவியுடன் சாலைகளின் குறுக்கே விழுந்து கிடந்த மரங்களை வெட்டி அகற்றினர். அதன்பின்னரே தனியார் வாகன போக்குவரத்து நடைபெற்றது. இதனிடையே இரவு நேரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கூடலூர், மசினகுடி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் வனத்தில் புற்களும் செழித்து வளர்வதால் காட்டு தீ பரவ வாய்ப்பு இல்லை என்று வனத்துறையினரும் நிம்மதி அடைந்து உள்ளனர்.

மகிழ்ச்சி

இதுகுறித்து விவசாயிகள் கூறிய தாவது:-

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை பனி மற்றும் கோடை வெயில் காணப்படும். இதனால் தேயிலை விளைச்சல் உள்பட அனைத்து விவசாயமும் பாதிக்கப்படும். நடப்பு ஆண்டில் ஊரடங்கு அமலில் உள்ளது. இக்காலக்கட்டத்தில் பகலில் நன்கு வெயில் இருந்தாலும், தினமும் இரவில் பெய்யும் மழையால் விவசாய நிலம் போதிய அளவு ஈரத்தன்மையுடன் உள்ளது. இதனால் பச்சை தேயிலை விளைச்சல் மட்டுமின்றி காபி, குறுமிளகு மற்றும் காய்கறி பயிர்களுக்கு ஏற்றதாக உள்ளது. மேலும் தென்மேற்கு பருவமழை விரைவாக தொடங்குவதற்கான அறிகுறியாகவும் இதை பார்க்க வேண்டும். இவ்வாறு மகிழ்ச்சியுடன் அவர்கள் கூறினர்.

Next Story